EBM News Tamil
Leading News Portal in Tamil

‘மாஸ்கோவில் வாழ முடியாது’ – தப்பிய சிரியா அதிபரிடம் விவாகரத்து கோரும் மனைவி | Can’t Live in Moscow – Wife Seeks Divorce from Bashar Al Assad


டமாஸ்கஸ்: “மாஸ்கோவில் வாழ இயலாது. அதனால் எனக்கு விவாகரத்து வேண்டும். லண்டன் செல்ல சிறப்பு அனுமதி வேண்டும்” என்று சிரியாவிலிருந்து வெளியேறிய முன்னாள் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் மனைவி அஸ்மா அல் ஆசாத் கோரியுள்ளார். ரஷ்ய நீதிமன்றத்தில் அவர் இது தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளதாக அரபு மற்றும் துருக்கி நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

சிரி​யா​வில் அதிபராக இருந்த பஷார் அல் ஆசாத் அரசுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு புரட்சி வெடித்​தது. ஆசாத் படைகளுக்​கும் கிளர்ச்சிப் படைகளுக்​கும் இடையே பல ஆண்டு​களாக போர் நடைபெற்​றது. இதில் சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்தனர். இந்நிலை​யில், கடந்த நவம்பர் 27-ம் தேதி சிரியா ராணுவத்​துக்கு எதிராக மிகப்​பெரிய போரை துருக்கி ஆதரவு பெற்ற எச்டிஎஸ் கிளர்ச்​சிப் படை தொடங்​கியது. அதேநேரம், ஈரானும், ரஷ்யாவும் ஆதரவு தராததால் ஆசாத் தலைமையிலான சிரியா ராணுவம் பின்னடைவை சந்தித்​தது. இதனால் முக்கிய நகரங்களை கைப்​பற்றிய எச்டிஎஸ் வீரர்​கள், தலைநகர் டமாஸ்கஸை கடந்த 8-ம் தேதி கைப்​பற்றினர். இதையடுத்து, ஆசாத் ரஷ்யா​வுக்கு தப்பிச் சென்​றார். அவர் செல்வதற்கு முன்னதாகவே அவரது குடும்பத்தினர் அங்கு சென்றுவிட்டனர்.

இந்தப் பின்னணியில் தான் ஆசாத்தின் மனைவி அஸ்மா விவாகரத்து கோரி ரஷ்ய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததோடு மாஸ்கோவில் இருந்து வெளியேற சிறப்பு அனுமதியும் கோரியுள்ளார். அஸ்மா பிரிட்டிஷ் – சிரிய குடும்பத்தில் பிறந்தவர். அவரது 2000 ஆம் ஆண்டில் தனது 25-வது வயதில் சிரியா சென்றார். அங்கு பஷார் அல் ஆசாத்தின் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

முன்னதாக, பஷார் அல் ஆசாத் ரூ.2 ஆயிரம் கோடியை ரஷ்யா​வுக்கு எடுத்​துச் சென்​றதாகவும், இந்தத் தொகையை கடந்த 2018 மற்றும் 2019 காலகட்​டத்​தில் ரஷ்யா​வுக்கு அனுப்பி வைத்திருப்​பதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது. அதேபோல், மாஸ்​கோ​வின் நுகோவோ விமான நிலையம் சென்​றடைந்த கரன்​சிகள் அந்நாட்டு வங்கி​களில் டெபாசிட் செய்யப்பட்​ட​தாக​வும், ஆசாத்​தின் உற​வினர்​கள் இதே ​காலத்​தில் ரஷ்​யா​வில் ரகசி​யமாக சொத்துகளை வாங்​கியதா​வும் தகவல் வெளி​யானது. சிரியாவிலிருந்து பஷார் அல் ஆசாத் வெளியேறிவிட்டாலும் அவரையும், அவரது குடும்பத்தையும் சுற்றிய பரபரப்பு செய்திகள் மட்டும் குறைந்தபாடில்லை.