ஏஐ துறை ஆலோசகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்த ட்ரம்ப் | Indian American entrepreneur Sriram Krishnan appointed as advisor on AI
வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை அமெரிக்க ஏஐ தொழில்நுட்பத் துறை கொள்கை ஆலோசகராக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப்.
வெள்ளை மாளிகையின் அறிவியல் தொழிநுட்ப கொள்கை துறையின் ஏஐ பிரிவின் மூத்த கொள்கை ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணன் செயல்படுவார் என்று ட்ரம்ப் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். கிருஷ்ணன் ஏற்கெனவே மைக்ரோசாஃப்ட், ட்விட்டர், யாஹு, பேஸ்புக், ஸ்நாப் போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். அவர் டேவிட் ஓ சாக்ஸுடன் இணைந்து பணிபுரிவார். டேவிட் சேக்ஸ் வெள்ளை மாளிகை ஏஐ, கிரிப்டோ துறை தலைவராக செயல்படுவார்.
புதிய பதவி குறித்து ஸ்ரீரம் கிருஷ்ணன், “ஏஐ துறையில் அமெரிக்காவை தொடர்ந்து முன்னிலைப்படுத்துவதை உறுதி செய்து, நாட்டிற்கு சேவையாற்ற இருப்பதை பெருமையாகக் கருதுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னையில் பிறந்து, வளர்ந்து, படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்: முன்னதாக, ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்பிஐ – FBI) இயக்குநராக தனக்கு நெருங்கிய நம்பிக்கையாளரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் பட்டேலை ட்ரம்ப் நியமித்தார். உளவுத்துறை இயக்குநராக துளசி கப்பார்டை தேர்வு செய்தார். இப்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை அமெரிக்க ஏஐ தொழில்நுட்பத் துறை கொள்கை ஆலோசகராக நியமித்துள்ளார்.