EBM News Tamil
Leading News Portal in Tamil

“சீக்கிய பிரிவினைவாதிகள் குறிவைக்கப்பட்டதற்கு அமித் ஷாவின் உத்தரவே காரணம்” – கனடா அமைச்சர் | Canada alleges Amit Shah ‘ordered’ campaign targeting Sikh separatists


ஒட்டாவா (கனடா): கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் குறிவைக்கப்பட்டதற்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவே காரணம் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு தான்தான் கூறியதாக கனடா துணை வெளியுறவு அமைச்சர் டேவிட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு கனடாவில் கொல்லப்பட்டதற்கு நரேந்திர மோடி அரசு உதவியதாக நம்பகமான குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறி இருந்தார். இந்த விவகாரம் இரு தரப்பு உறவில் பெரும் விரிசல் ஏற்பட காரணமாக இருந்தது.

ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டை அடுத்து கனடாவில் உள்ள 41 தூதரக அதிகாரிகளை இந்திய திரும்ப அழைத்துக்கொண்டது. இந்தியாவில் இருந்தும் கனடா நாட்டு தூதர்களை வெளியேற உத்தரவிட்டது.

இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் செய்தி வெளியிட்ட அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட், கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல்களுக்கு “இந்தியாவில் உள்ள மூத்த அதிகாரி” ஒருவர் அங்கீகாரம் அளித்ததாகவும், அது குறித்த ஆதாரங்களை கனடா பாதுகாப்பு முகமைகள் சேகரித்ததாகவும் கூறியிருந்தது. அந்த மூத்த அதிகாரி யார் என்ற கேள்விக்கு பின்னர் அமித் ஷா என அந்த பத்திரிகை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கு அங்கீகாரம் அளித்தது அமித் ஷாதான் என்ற தகவலை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்தது தான்தான் என கனடாவின் வெளியுறவுத்துணை அமைச்சர் டேவிட் மோரசின் தெரிவித்துள்ளார்.

“பத்திரிகையாளர் என்னை அழைத்து, அந்த நபரா என்று கேட்டார். அந்த நபர் தான் என்பதை நான் உறுதி செய்தேன்” என்று டேவிட் மோரிசன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், அமித் ஷா மீதான தனது குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வித ஆதாரங்களையும் அவர் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.