இஸ்ரேலை நோக்கி 400 ஏவுகணைகள்: ஈரான் தாக்குதலால் லட்சக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் | Iran fires 400 missiles into Israel
ஜெருசலேம்: இஸ்ரேல் மீதான தாக்குதலை தொடங்கியுள்ள ஈரான், 400 ஏவுகணைகளை வீசியுள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கான இஸ்ரேலியர்கள் பதுங்குக் குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இஸ்ரேலை நோக்கி 400 ஏவுகணைகளை ஈரான் ராணுவம் வீசியுள்ளது. டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து வீசப்பட்டுள்ள இந்த ஏவுகணைகளால், அங்குள்ள லட்சக்கணக்கான பொதுமக்கள் பதுங்குக் குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அடுத்த அறிவிப்பு வரும் வரை அவர்கள் அங்கிருந்து வெளியே வரவேண்டாம் என்று இஸ்ரேல் ராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது. வானில் பறந்து வரும் ஏவுகணைகளை வழியிலேயே தடுத்து அழிக்கும்பொருட்டு அதிநவீன கருவிகள் தயாராக இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சில மணி நேரத்துக்கு முன்பு, ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளனர். இஸ்ரேலியர்கள் விழிப்புடன் இருக்கவும், அரசின் உத்தரவுகளை சரியான முறையில் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இஸ்ரேல் குடிமக்களைப் பாதுகாக்க தேவையான அனைத்தையும் இஸ்ரேல் ராணுவம் செய்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தாக்குதலுக்கான பின்விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும் என்றும், இதற்கான பதிலடி சரியான நேரத்தில் சரியான இடத்தில் கொடுக்கப்படும் என்றும் இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.
முன்னதாக இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் 7-ம்தேதி தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 251 பேர் காசாவுக்கு பிணைக் கைதிகளாக கடத்தி செல்லப்பட்டனர். இதனால் காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளை ஒழிக்க இஸ்ரேல் போர் தொடுத்தது. தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த தாக்குதலில், பாலஸ்தீனத்தின் காசா உள்ளிட்ட பகுதிகளில் 40,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து காசாவுக்கு ஆதரவாக இஸ்ரேலின் அண்டை நாடான லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக லெபனானில் சில தினங்களுக்கு முன்பு ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பயன்படுத்திய பேஜர்களும், வாக்கி டாக்கிகளும் வெடித்துச் சிதறின. இந்த தாக்குதலின் பின்னால் இஸ்ரேல் இருப்பதாக கூறப்பட்டது. இதன் பின்னர் இஸ்ரேல் தொடர்ந்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் நடத்திய விமானப் படை தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்த சம்பவம் மத்திய கிழக்கில் பதற்றமான சூழலை உருவாக்கியது. தொடர்ந்து ஹிஸ்புல்லாக்களின் ட்ரோன் படைப் பிரிவு தலைவர் ஹுசைன் சிரோர், மற்றொரு உயர்மட்ட தளபதியான நபில் கவுக் ஆகியோரை அடுத்தடுத்து இஸ்ரேல் ராணுவம் கொன்றது.
லெபனான் மீதான தொடர் தாக்குதலை நிறுத்துமாறு ஐ.நா. தொடங்கி சர்வதேச அமைப்புகளும், உலக நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் கூட லெபனான் மீது இஸ்ரேல் நேற்று தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் லெபனானில் 1000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் இந்த தொடர் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை தொடங்கியிருக்கிறது.