ஜெருசலேம்: இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதலை தொடங்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் சைரன் ஒலி எழுப்பி பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் ஈரான் நேரடியாக ராணுவ தாக்குதல்களை தொடுக்க நேரிடலாம் என்று இன்று (அக்.01) அமெரிக்காவின் வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த சூழலில் தற்போது இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளதை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், “சைரன் ஒலிகள் கேட்டால் பொதுமக்கள் அந்த பகுதியை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று அடுத்த அறிவிப்பு வரும் வரை அங்கேயே இருக்கவும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை ஈரான் அரசு ஊடகமான ஐஆர்ஜிசி டிவியும் உறுதி செய்துள்ளது. காஸா, லெபனான் மீதான தொடர் தாக்குதல்கள், ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பதிலடியாக இந்த தாக்குதலை ஈரான் முன்னெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு மேலே ஏராளமான ஏவுகணைகள் பறந்து செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனையடுத்து பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணிகளை இஸ்ரேல் அரசு முடுக்கி விட்டிருக்கிறது.
முன்னதாக இன்று இஸ்ரேலின் தெற்கு டெல் அவிவ் நகரில் உள்ள யாஃபா பகுதியில் இரண்டு மர்ம நபர்கள் திடீரென பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.