EBM News Tamil
Leading News Portal in Tamil

பிரான்ஸில் இன்டர்நெட் கேபிள்கள் சேதம்: இணைய சேவை பாதிப்பு | Damage to fibre optic Internet cables in France


பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் பல்வேறு இடங்களில் ஃபைபர்-ஆப்டிக் இன்டர்நெட் கேபிள்கள் சேதம் காரணமாக இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனை போலீஸார் உறுதி செய்துள்ளனர். இருந்தும் இதனால் பாரிஸ் நகரம் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு விஷமிகளின் தீவைப்பு உள்ளிட்ட சதிவேலைகள் காரணமாக அதிவேக ரயில் சேவைகள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாதிக்கப்பட்டன. பாரிஸ் நகரில் ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கு சில மணி நேரத்துக்கு முன் ஏற்பட்ட இந்த பாதிப்பால் லட்சக்கணக்கான பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அடுத்த மூன்றே நாட்களில் இன்டர்நெட் கேபிள்கள் சேதம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரே இரவில் ஃப்ரீ மற்றும் எஸ்எஃப்ஆர் உட்பட பல்வேறு டெலிகாம் நிறுவனங்களின் ஃபைபர்-ஆப்டிக் இன்டர்நெட் கேபிள்கள் சேதம் செய்யப்பட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டில் உள்ள சுமார் ஆறு பகுதிகளில் இது அரங்கேறியுள்ளது. யாரோ திட்டமிட்டு இதனை செய்துள்ளனர். கேபிள்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதற்கு கோடாரி போன்றவற்றை பயன்படுத்தி இருக்க வேண்டும் என எஸ்எஃப்ஆர் டெலிகாம் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதற்கு யார் காரணம் என இதுவரை தெரியவில்லை. இருந்தும் இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளின் மீதான தாக்குதலின் தீவிரத்தை அரசு இன்னும் உணரவில்லை என நாங்கள் கருதுகிறோம். ரயில் சேவையில் என்ன நடந்தது என்பதை நாம் ஏற்கெனவே பார்த்தோம். இதன் பின்னணியில் இடதுசாரிகளின் பங்கு இருக்கலாம் என அரசியல் கட்சி பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.