EBM News Tamil
Leading News Portal in Tamil

நேபாள பிரதமராக கே.பி. சர்மா ஒலி பதவியேற்றார் | K.P. Sharma Oli sworn in as Nepal’s Prime Minister


காத்மாண்டு: நேபாளத்தின் பிரதமராக நான்காவது முறையாக கே.பி. சர்மா ஒலி பதவியேற்றார். நேபாளத்தின் மிகப் பெரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான கே.பி. சர்மா ஒலியை, நாட்டின் பிரதமராக அதிபர் ராம் சந்திர பாடேல் நியமனம் செய்தார்.

நேபாளத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை எந்த கட்சியும் பெறவில்லை. இதையடுத்து, சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார். அதன்பிறகு கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்பப் பெற்றது. இதையடுத்து, நேபாள காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் பிரசந்தா நீடித்தார்.

இதனிடையே, சில வாரங்களுக்கு முன்பு நேபாளத்தின் மிகப் பெரிய கட்சிகளான நேபாள காங்கிரஸ் மற்றும் சிபிஎன் – யுஎம்எல் இடையே கூட்டணி ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டது. 275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில், நேபாளி காங்கிரஸ் கட்சி 89 உறுப்பினர்களையும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-யுனிஃபைட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) 78 உறுப்பினர்களையும் கொண்டுள்ளன.

இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைத்து புதிய அரசை அமைக்க ஒப்புக்கொண்டதை அடுத்து, பிரதமர் பிரசந்தா நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தார். கடந்த வெள்ளிக்கிழமை, நேபாள பிரதிநிதிகள் சபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிரசந்தா தோல்வியடைந்தார். அவருக்கு ஆதரவாக 63 வாக்குகள் மட்டும் கிடைத்தன. எதிராக 194 வாக்குகள் பதிவாகின.

இதனையடுத்து, நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி. சர்மா ஒலி இன்று பதவியேற்றார். நேபாள அரசியலமைப்பு விதியின்படி, பிரதிநிதிகள் சபையில் 30 நாட்களுக்குள் பிரதமர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். தற்போது கூட்டணி அமைத்துள்ள நேபாளி காங்கிரஸ் கட்சியும், சிபிஎன்-யுஎம்எல் கட்சியும் 167 உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. பெரும்பான்மைக்கு 138 இடங்களே போதுமானதாகும். எனவே, கே.பி. சர்மா ஒலி இதில் எளிதாக வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.