“கருத்து வேறுபாடு உண்டு; ஆனால் நாங்கள் எதிரிகள் அல்ல” – ட்ரம்ப் தாக்குதல்; பைடன் கருத்து | We may disagree, we are not enemies: Joe Biden says after assassination attempt:
வாஷிங்டன்: “எங்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டு; ஆனால் நாங்கள் எதிரிகள் அல்ல” என்று ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 50 ஆயிரம் பேர் திரண்டிருந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதிபர் ஜோ பைடன் இச்சம்பவம் குறித்து நாட்டு மக்களுக்காக உரையாற்றியுள்ளார். பைடனின் இந்த உரை அரிதானதாகக் கருதப்படுகிறது.
அந்த உரையில் பைடன் கூறியதாவது: எனது சக அமெரிக்கர்களே! நம் அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க விரும்புகிறேன். எனக்கும் ட்ரம்புக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் நாங்கள் எதிரிகள் இல்லை என்பதை உணர்த்த விரும்புகிறேன். நாம் அனைவரும் அமெரிக்கர்கள் என்றவகையில் ஒன்றுபட்டு நிற்பது அவசியம். தாக்குதலுக்குப் பின்னர் ட்ரம்ப் நலமாக இருக்கிறார் என்பதை அறிந்தேன். இத்தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பத்துக்கு எங்களது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரின் இலக்கு என்னவென்பது இன்னும் தெரியவில்லை. குற்றத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைப் பற்றிய விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அவரது ஆதரவாளர் கொல்லப்பட்டுள்ளார். அமெரிக்கா இதுபோல் கீழ்நிலைக்கு இறங்கக்கூடாது. அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறைக்கு இடமில்லை. வன்முறை எப்போதும் எதற்கான விடையையும் பெற்றுத் தந்ததில்லை. இத்தகைய வன்முறைச் சம்பவங்களை நம் நாட்டில் அனுமதிக்கவே முடியாது. அமெரிக்கர்கள் எதிரெதிர் அரசியல் கருத்துகளைக் கொண்டவர்களை மதிக்க வேண்டும். நம் சமூகத்தைப் பிரிக்க அந்நிய சக்திகள் முயற்சிக்கலாம் அதற்கு நாம் இரையாகிவிடக்குடாது. இவ்வாறு பைடன் பேசினார்.
நடந்தது என்ன? அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் (78) போட்டியிட உள்ளார். இதற்காக இப்போதே அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், பென்சில்வேனியா மாநிலத்தின் பட்லர் நகரில் குடியரசு கட்சி சார்பில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் ட்ரம்ப் பங்கேற்றார். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.
ட்ரம்ப் பேசத் தொடங்கிய 6-வது நிமிடத்தில் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. இதில் ஒரு குண்டு ட்ரம்ப்பின் வலது காதை துளைத்தபடி சென்றது. சுதாரித்த அவர் உடனடியாக தரையில் படுத்துக் கொண்டு உயிர் தப்பினார். ஆனால், அருகே இருந்த அவரது ஆதரவாளர் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.