அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: பிரதமர் மோடி கண்டனம் | Shooting at former US President Trump PM Modi condemns
வாஷிங்டன்: அமெரிக்காவில் 50 ஆயிரம் பேர் திரண்டிருந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதில் குண்டு பாய்ந்த நிலையில் நூலிழையில் அவர் உயிர் தப்பினார். இத்தாக்குதலில் அவரது ஆதரவாளர் உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் (78) போட்டியிட உள்ளார். இதற்காக இப்போதே அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், பென்சில்வேனியா மாநிலத்தின் பட்லர் நகரில் குடியரசு கட்சி சார்பில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் ட்ரம்ப் பங்கேற்றார். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.
ட்ரம்ப் பேசத் தொடங்கிய 6-வது நிமிடத்தில் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. இதில் ஒரு குண்டு ட்ரம்ப்பின் வலது காதை துளைத்தபடி சென்றது. சுதாரித்த அவர் உடனடியாக தரையில் படுத்துக் கொண்டு உயிர் தப்பினார். ஆனால், அருகே இருந்த அவரது ஆதரவாளர் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. ட்ரம்ப்பை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை, பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
இதற்கிடையே, குண்டு காயத்தால் காதில் இருந்து ரத்தம் வெளியேறிய நிலையில், ட்ரம்ப்பை பாதுகாப்பு படையினர் உடனே மீட்டு, பட்லர் நினைவு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சில மணிநேரத்துக்கு பிறகு, அவர் அங்கிருந்து விமானம் மூலம் நியூஜெர்ஸிக்கு புறப்பட்டு சென்றார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார்? ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர், பென்சில்வேனியாவின் பெத்தேல் பார்க் பகுதியை சேர்ந்த தாமஸ் மேத்யூ (20). இவர் ட்ரம்ப்பின் குடியரசு கட்சியை சேர்ந்த உறுப்பினர். மேடையில் ட்ரம்ப் பேசிக் கொண்டிருந்தபோது, சுமார் 400 அடி தொலைவில் உள்ள கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்தபடி, ஏஆர்-15ரக துப்பாக்கியால் சுட்டுள்ளார். முதல் சுற்றில் 3 குண்டுகள், 2-வது சுற்றில் 5 குண்டுகள் என மொத்தம் 8 குண்டுகள் பாய்ந்துள்ளன. இதில் ஒரு குண்டு மட்டும், ட்ரம்ப்பின் வலது காதின் மேல் பகுதியை துளைத்தபடி சென்றுள்ளது.
எந்த ஒரு வழக்கும், குற்றப் பின்னணியும் இல்லாத இவர் எதற்காக ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்று தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரது வீட்டில்முழுமையாக சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. முழு விசாரணைக்கு பிறகு தகவல்களை வெளியிடுவோம் என்று அமெரிக்க எஃப்பிஐ போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாதுகாப்பில் குறைபாடு: கூட்டத்தில் பங்கேற்ற கிரேக் என்பவர் கூறியதாவது: ட்ரம்ப் பேசத்தொடங்கியபோது, கட்டிடத்தின் மேற்பகுதி கூரையில் துப்பாக்கியுடன் ஒருவர் ஊர்ந்து ஏறினார். இதுகுறித்து அங்கு இருந்த பாதுகாப்பு படை வீரர்களிடம் தெரிவித்தோம். ஆனால்,அவர்கள் அலட்சியமாக இருந்தனர்.சில நிமிடங்களில் அந்த நபர் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். அதன்பிறகே பாதுகாப்பு படையினர்பதில் தாக்குதல் நடத்தினர். முன்கூட்டியே கவனித்திருந்தால் அசம்பாவிதத்தை தவிர்த்திருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
அதிபர் பைடன் கண்டனம்: இந்நிலையில், ட்ரம்ப் மீதான தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ட்ரம்ப்பை தொடர்பு கொள்ள முயன்றேன். அவர் சிகிச்சையில் இருந்ததால் பேச முடியவில்லை. அமெரிக்காவில் வன்முறைக்கு இடம் கிடையாது. நாட்டு மக்கள் அனைவரும் வன்முறைக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்றார். ‘தாக்குதல் தொடர்பான விவரங்களை கோரியுள்ளேன்’ என்று வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் ரகசிய போலீஸாருக்கும், அனைத்து பாதுகாப்பு படையினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது வலது காதின் மேல் பகுதியை துப்பாக்கி குண்டு துளைத்துச் சென்றது. காதில் இருந்துரத்தம் வழிந்தது. அதன்பிறகே துப்பாக்கிச்சூடு நடந்ததை உணர்ந்தேன். நாம் எதற்கும் அஞ்ச கூடாது. தீமைக்கு எதிராக உறுதியாக போரிடவேண்டும். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தாக்குதலை வியாபாரமாக்கிய சீனா: இதற்கிடையே, துப்பாக்கிச்சூடு நடந்த அடுத்த சில மணி நேரத்தில், ரத்த காயத்துடன் ட்ரம்ப் இருக்கும் புகைப்படத்தை அச்சிட்டு புதிய டி-ஷர்ட்டை சீனாவின் ஆன்லைன் விற்பனை நிறுவனம் அறிமுகம் செய்தது. ‘துப்பாக்கிச்சூடு என்னை மேலும் வலிமையாக்கி உள்ளது’ என்ற வாசகமும் அதில் அச்சிடப்பட்டுள்ளது. சீனா மற்றும் அமெரிக்காவில் ஆன்லைனிலும், நேரடியாகவும் இந்த டி-ஷர்ட் அமோகமாக விற்பனையாவதாக ஆன்லைன் வணிகர் ஜின்வெய் என்பவர் தெரிவித்தார்.
தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்: ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
எனது நண்பரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்ப் மீதான தாக்குதல் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். அரசியலிலும், ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை. அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் மற்றும் அமெரிக்க மக்களுக்கு துணையாக இருப்போம். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களும் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.