EBM News Tamil
Leading News Portal in Tamil

பசியால் இறக்கும் காசாவின் குழந்தைகள்: பின்னணியில் இஸ்ரேல் என ஐ.நா வல்லுநர்கள் கருத்து | Gaza children dying starvation Israel target UN experts


ஜெனிவா: காசாவில் பட்டினியால் குழந்தைகள் உயிரிழந்து வருவதாக ஐ.நா வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாகவும் அவர்க நேற்று (ஜூலை 9) தெரிவித்தனர். இது ஒருவகையில் பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலை என்றும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் வசித்து வரும் மக்கள் தங்களது வசிப்பிடங்களில் இருந்து கான் யூனிஸ் பகுதிக்கு புலம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், அங்கு நிலவும் பட்டினி சூழல் கவனம் பெற்றுள்ளது.

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் உள்நோக்கத்துடன் பட்டினி சூழலை ஏற்படுத்தியுள்ளது. இது இனப்படுகொலையின் ஒரு வடிவம். இதனால் காசா முழுவதும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா வல்லுநர்கள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஐ.நா தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.நா-வின் உணவுக்கான உரிமை சார்ந்த சிறப்பு அறிக்கையாளர் மைக்கேல் ஃபக்ரி உட்பட ஐ.நா வல்லுநர்கள், காசாவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இதுவரை சுமார் 34 பாலஸ்தீனியர்கள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என ஐ.நா வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஹமாஸை காக்கும் நோக்கில் இப்படி தன்னிச்சையாக மைக்கேல் ஃபக்ரி உள்ளிட்ட ஐ.நா அதிகாரிகள் அறிக்கை வெளியிடுவதாக இஸ்ரேல் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

அண்மையில் ஊட்டச்சத்து குறைபாட்டால் மூன்று குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஆறு மாத குழந்தை, 9 மற்றும் 13 வயது சிறுவர்கள் என மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மே 30, ஜூன் 1 மற்றும் ஜூன் 3 ஆகிய தேதிகளில் அவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் இருவர் மருத்துவமனையிலும், ஒருவர் முகாமிலும் உயிரிழந்துள்ளார். மேலும், காசா விவகாரத்தில் உலக நாடுகள் முன்பே தலையிட்டு இருக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி நடந்திருந்தால் பேரழிவு தடுக்கப்பட்டு இருக்கும் என கூறியுள்ளனர்.

தெற்கு இஸ்ரேலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி அன்று ஹமாஸ் தீவிரவாத படையின் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,195 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் காசாவை சேர்ந்த சுமார் 60 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.