EBM News Tamil
Leading News Portal in Tamil

வயலுக்குள் தவறுதலாக நுழைந்த ஒட்டகத்தின் காலை துண்டித்த 5 பேர் கைது @ பாகிஸ்தான் | Five arrested for chopping off camel leg in Pakistan Sindh


கராச்சி: பாகிஸ்தானில் வயல்வெளியில் தவறுதலாக நுழைந்து பயிர்களை மேய்ந்த ஒட்டகத்தின் காலை வெட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சங்கார் மாவட்டத்தில் முந்த் ஜாம்ரோ என்ற கிராமத்தில் சூமர் கான் என்பவருக்குச் சொந்தமான ஒட்டகம் ஒன்று மேய்ச்சலுக்கு செல்லும்போது, வேறு ஒருவருக்கு சொந்தமான வயல்வெளிக்குள் நுழைந்து பயிர்களை மேய்ந்துள்ளது.

இதனைக் கண்ட அந்த நிலத்தின் உரிமையாளர் மற்றும் அங்கு வேலை செய்து கொண்டிருந்த சிலர் சேர்ந்து அந்த ஒட்டகத்தை பிடித்து அடித்துள்ளனர். பின்னர் அதன் ஒரு காலை வெட்டி எடுத்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. நெட்டிசன்கள் பலரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தனர். இதனையடுத்து நிலத்தின் உரிமையாளர் உட்பட ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர்.

இது தொடர்பாக சிந்து மாகாண மூத்த அமைச்சர் ஷர்ஜீல் இமாம் மேமன் கூறும்போது, “நிலத்தின் உரிமையாளரும் ஒட்டகத்தின் உரிமையாளரும் சமாதானம் ஆகிவிட்டாலும் மனிதாபிமான அடிப்படையில் இந்த வழக்கை அரசு கையில் எடுத்துள்ளது” என்றார். ஒட்டகத்தின் உரிமையாளர் சூமர் கான், தனது ஒட்டகத்தின் காலை வெட்டியர்கள் மீது புகார் கொடுக்க மறுத்துவிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.