நித்தியானந்தாவின் கைலாசாவுடன் ஒப்பந்தம் செய்த பராகுவே அமைச்சரின் பதவி பறிப்பு | Paraguay minister deal with Nithyananda s Kailasa was stripped of his post
அசுன்சியோன்: நித்தியானந்தாவின் ‘கைலாசா’ கற்பனை தேசத்துடன் ஒப்பந்தம் செய்த பராகுவே வேளாண் துறை அமைச்சர் அர்னால்டோ சாமோராவின் பதவி பறிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் பிறந்த நித்தியானந்தாவுக்கு (45) தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரமங்கள் உள்ளன. கர்நாடகாவின் பிடதியில் 200 ஏக்கர் பரப்பில் அவரது தலைமை பீடம் செயல்படுகிறது. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் அவருக்கு பல்வேறு ஆசிரமங்கள் உள்ளன.
பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல், பண மோசடி உள்ளிட்ட வழக்குகளில் சிக்கிய அவர் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பரில் தலைமறைவானார். அதே ஆண்டு டிசம்பரில் கைலாசா என்ற பெயரில் புதிய நாட்டை உருவாக்கி இருப்பதாக அவர் அறிவித்தார். அந்த நாட்டுக்கு தனிக்கொடி, பாஸ்போர்ட், கரன்சியையும் வெளியிட்டார்.
கடந்த மார்ச் மாதம் ஐ.நா. சபை கூட்டத்தில் நித்தியானந்தாவின் சிஷ்யைகள் சிலர் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தினர். அப்போது அமெரிக்காவின் 30 நகரங்கள், பிரான்ஸ், கினீ நாடுகளின் நகரங்களுடன் ‘சிஸ்டர் சிட்டி’ ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கைலாசாவின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் தென் அமெரிக்க நாடானபராகுவேவின் வேளாண் துறை மற்றும் கைலாசா இடையே கடந்த அக்டோபர் 16-ம்தேதி ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுதொடர்பாக கைலாசாவின் இணையதளம், சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், ஒப்பந்த நகல்கள் வெளியிடப்பட்டன.
இந்த விவகாரம் பராகுவேவின் முன்னணி ஊடகங்களில் வெளியாகி கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. பராகுவே நாடாளுமன்றத்திலும் கைலாசா விவகாரம் எழுப்பப்பட்டது. இதுதொடர்பாக பராகுவே அரசு விசாரணை நடத்தியதில் கற்பனை தேசத்துடன் வேளாண் துறை ஒப்பந்தம் செய்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வேளாண் அமைச்சர் அர்னால்டோ சாமோரா நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து அர்னால்டோ கூறும்போது, “கைலாசா நாட்டை சேர்ந்த 2 பிரதிநிதிகள் என்னை சந்தித்தனர். எங்கள் நாட்டுக்கு உதவி செய்வதாக உறுதி அளித்தனர். பல்வேறு திட்டங்களை முன்வைத்தனர். அவர்களை நம்பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்” என்று தெரிவித்தார்.