EBM News Tamil
Leading News Portal in Tamil

உக்ரைனை தாக்கிய பனிப்புயலில் 10 பேர் உயிரிழப்பு – இயல்பு வாழ்க்கை முடக்கம் | Death Toll Reaches 10 in Heavy Snow Storm Batters Ukraine


கீவ்: உக்ரைன் நாட்டின் தெற்குப் பகுதியான ஒடேசா ஒப்லாஸ்டை (Odesa Oblast) கடுமையானப் பனிப்புயல் தாக்கியதில் 10 பேர் பலியாகியுள்ளதாகவும், இரண்டு குழந்தைகள் உட்பட 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உலக நாடுகளையே உற்று நோக்க வைத்தது உக்ரைன் – ரஷ்யா போர். சுமார் 21 மாதங்களுக்கும் மேலாக ரஷ்யா, உக்ரைன் மீது கொடூரத் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதனால் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், நவம்பர் 26-27 ஆம் தேதிகளில் கடுமையான புயல், காற்று, மழை மற்றும் பனிப்பொழிவு உக்ரைனின் பெரும்பகுதியைத் தாக்கியது. இந்த நிலையில், பலத்த வேகத்துடன் பனிக்காற்று வீசியதில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதனால் பல பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்க்கை முறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது உக்ரைன் நாட்டின் தெற்குப் பகுதியான ஒடேசாவை கடுமையானப் பனிப்புயல் தாக்கியதில் 10 பேர் பலியாகியுள்ளதாகவும், இரண்டு குழந்தைகள் உட்பட 23 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் இருந்து 2,500 பேர் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, 24 மணிநேரமும் மீட்புப் பணியை மேற்கொண்டதற்காக மீட்புப் பணியாளர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். மோசமான வானிலையால் உக்ரைனின் 16 பிராந்தியங்களில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலைப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.