EBM News Tamil
Leading News Portal in Tamil

டிசம்பர் முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் மலேசியா செல்லலாம் | From December Indians can visit Malaysia without a visa


கோலாலம்பூர்: இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் இனி விசா இன்றி மலேசியாவுக்கு வருகை தரலாம் என அந்த நாட்டின் பிரதமர்அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார். அந்நிய செலவாணியை அதிகரிக்கும் நோக்கில் மலேசிய அரசு இத்திட்டத்தை அறிவித்துள்ளது.

புத்ரஜெயாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள் நீதிக் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்ற அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: மலேசியாவில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கூடுதல் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதன் மூலம் அதிக அளவில் அந்நியச் செலாவணி வருவாயினை பெற முடியும்.

இதை மனதில் கொண்டே சீனா மற்றும் இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இனி விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் மலேசியாவில் தங்கி சுற்றுலா இடங்களை பார்வையிட அனுமதிக்கப்படும். இந்த புதிய நடைமுறை வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. எனினும், இந்த திட்டம் பாதுகாப்பு தணிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டே செயல்படுத்தப்படும். இவ்வாறு அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.

முதலீட்டாளர்களின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் விசா திட்டங்களில் புதிய நடைமுறையை கொண்டு வரவுள்ளதாக மலேசிய பிரதமர் ஏற்கெனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியா உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் விசா இல்லாமல் தங்கள் நாட்டுக்கு வருகை தரலாம் என சீனா கடந்த வாரம் அறிவித்தது. டிசம்பர் 1-ம் தேதி அறிமுகமாகும் இந்த புதிய நடைமுறை அடுத்த ஆண்டு நவம்பர் 30-வரை அமலில் இருக்கும் என சீனா அறிவித்தது. இதன் மூலம், வணிகம், சுற்றுலா தொடர்பாகவும், உறவினர்களை சந்திக்க வரும் 6 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் சீனாவில் விசா இல்லாமல் 15 நாட்கள் வரை தங்க முடியும்.