ஈராக்கில் பயங்கர தீ விபத்து – 100 பேர் உயிரிழப்பு | Iraq fire: At least 100 killed in blaze at wedding
பாக்தாத்: ஈராக்கில் திருமண நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 100 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஈராக் நாட்டின் நினேவா மாகாணத்தில் உள்ளது ஹம்தானியா என்ற பகுதி. பாக்தாத் நகரத்தில் இருந்து சுமார் 335 கிமீ தொலைவில் உள்ள இப்பகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள அரங்கில் இன்று (செப்.27) கிறிஸ்தவ திருமணம் ஒன்று நடைபெற்றது. இந்தத் திருமண நிகழ்வில் எதிர்பாராத விதமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
சில நிமிடங்களில் மளமளவென அரங்கு முழுவதும் தீ பரவியதால் அங்கிருந்த மக்களால் அரங்கிலிருந்து வெளியேற முடியவில்லை. இந்த விபத்தில் சுமார் நூறு பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்துமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்குமாறும் ஈராக் பிரதமர் முஹம்மது ஷியா அல்-சுடானி உத்தரவிட்டுள்ளார்.