EBM News Tamil
Leading News Portal in Tamil

”பாகிஸ்தானின் பொருளாதார மாடல் தோல்வி அடைந்துவிட்டது” – உலக வங்கி | World Bank’s clarion call to Pakistan: Your economic model has failed


வாஷிங்டன்: பாகிஸ்தானின் பொருளாதார மாடல் தோல்வி அடைந்துவிட்டதாகவும், கடந்த ஓராண்டில் மட்டும் 1.25 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே சென்றுவிட்டதாகவும் உலக வங்கி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தானுக்கான உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் டோபியாஸ் ஹக் கூறியது: “கடந்த ஒரு நிதி ஆண்டில், பாகிஸ்தானில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 34.2 சதவீதமாக இருந்த வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை தற்போது 39.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. புதிதாக 1.25 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே வந்துள்ளனர். இதன் மூலம் தற்போது 9.5 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் பொருளாதார மாடல், வறுமையைக் குறைக்கவில்லை. மாறாக, பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு இணையான பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளைவிட மக்களின் வாழ்க்கைத் தரம் சரிந்துவிட்டது.

பொருளாதாரப் பாதுகாப்புக்கு பாகிஸ்தான் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக, விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். வீண் செலவுகள் நிறுத்தப்பட வேண்டும். பாகிஸ்தானில் மனித வளர்ச்சி குறைந்துள்ளது. நிலையான நிதி நிலை இல்லை. தனியார் துறை அதிகமாக கட்டுப்படுத்தப்படுகிறது.

பாகிஸ்தானில் புதிதாக வரக் கூடிய அரசு விவசாயம் மற்றும் எரிசக்தித் துறையில் சீர்திருத்தத்தை மேற்கொண்டாக வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 5% வரியை உயர்த்த வேண்டும்; 2.7% செலவைக் குறைக்க வேண்டும். பாகிஸ்தானின் பொருளாதாரம் இன்று மிகவும் கவலை தரக்கூடியதாக இருக்கிறது. இதனால், பொருளாதாரத்தோடு மனித வளர்ச்சியும் கவலை தரக்கூடியதாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.