EBM News Tamil
Leading News Portal in Tamil

பஞ்சாபில் தேடப்படும் குற்றவாளி கனடாவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை | wanted convict in Punjab was shot dead by mysterious persons in Canada


வின்னிபெக்: காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார், கனடாவில் கடந்த ஜுன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் கூறியதால் இந்தியா-கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பஞ்சாபில் தேடப்படும் குற்றவாளியான சுக்துல் சிங் என்ற சுகா துனேகே கனடாவின் வின்னிபெக் நகரில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சாபின் மோகா மாவட்டத்தின் துனேகே கலன் கிராமத்தைச் சேர்ந்த இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை என 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கனடா தப்பிச் சென்றார். தவிந்தர் பம்பிகா கும்பலைச் சேர்ந்த இவருக்கு கனடாவில் உள்ள தீவிரவாத கும்பல் அர்ஷ் தல்லா, லக்கி பட்டியால் கும்பல், மலேசியாவைச் சேர்ந்த குற்றவாளி ஜேக்பல் சிங் உட்பட பல குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.

கடந்த சில மாதங்களாக சுக்துல் சிங், பஞ்சாபில் உள்ள பலரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்தது. கடந்த ஜனவரி மாதம் சுக்துல் சிங் கூட்டாளிகள் குல்விந்தர் சிங் பரம்ஜித் சிங் பம்மா ஆகியோரை பதிண்டா போலீஸார் கைது செய்து 3 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். சர்வதேச கபடி வீரர் சந்தீப் நங்கல் அம்பியான், போட்டி கும்பலைச் சேர்ந்த மன்ப்ரீத் சிங், விக்கி சிங் கொலை வழக்கிலும் சுக்துல் சிங் பெயர் இடம் பெற்றிருந்தது.

இதனால், சுக்துல் சிங் தேடப்படும் குற்றவாளியாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இவர் கனடாவில் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கோஷ்டி மோதல் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.