நியூசிலாந்தில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு | New Zealand hit by magnitude earthquake
வெல்லிங்டன்: நியூசிலாந்து நாட்டின் தெற்கு தீவு பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.
நியூசிலாந்து நாட்டின் தெற்கு தீவு பகுதியில் அமைந்துள்ள ஜெரால்டின் நகருக்கு அருகே இன்று காலை 9.15 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 11 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வை சுமார் 14,000 மக்கள் உணர்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவே மிக வலிமையானது என நியூசிலாந்து நில அதிர்வு கண்காணிப்பு மையமான ஜியோநெட் தெரிவித்துள்ளது.
மேலும், இதுவரை இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக தெரியவில்லை என்றும், தொடர்ந்து சேதம் குறித்த ஆய்வுகள் நடந்து வருவதாகவும் நிலநடுக்கம் ஏற்பட்ட டிமாரு நகர மேயர் ஸ்கார் ஷேனன் தெரிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு இதே பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 185 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.