EBM News Tamil
Leading News Portal in Tamil

சீன நிறுவனங்களில் அமெரிக்க முதலீட்டுக்கு கட்டுப்பாடு – அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு | Restrictions on US Investment in Chinese Companies – President Joe Biden Announcement


வாஷிங்டன்: சீன தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்வது தொடர்பாக அமெரிக்க நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.

இந்தப் புதிய உத்தரவின்படி, செமிகண்டக்டர், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ், குவாண்டம் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் சீன நிறுவனங்களில் அமெரிக்க முதலீட்டாளர்கள் முதலீடு செய்வது தடை செய்யப்படும். மேலும், மற்ற துறைகளில் முதலீடு மேற்கொள்வதற்கு அமெரிக்க அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி வகித்தபோது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக உறவில் விரிசல் தீவிரமடைந்தது. 2021-ம் ஆண்டு ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு அவ்விருநாடுகளிடையிலான வர்த்தக உறவு மேம்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சீனாவுடனான வர்த்தக உறவிலிருந்து விலகும் வகையில் புதிய அறிவிப்பை அதிபர் பைடன் வெளியிட்டுள்ளார்.

உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் சீனா உள்ளது. இந்தச் சூழலில், தற்போது சர்வதேச முக்கியத்துவம் பெற்றிருக்கும் செமிகண்டக்டர், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ், குவாண்டம் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சீன நிறுவனங்களில் அமெரிக்க முதலீட்டுக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. தேச பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பைடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிபர் பைடன் தரப்பினர் கூறுகையில், “அமெரிக்காவின் வளத்தையும், துறைசார் அறிவையும் பயன்படுத்தி சீனா தன்னுடைய தொழில்நுட்பம் மற்றும் ராணுவக் கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. இது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடியது. சீனாவின் தொழில்நுட்ப முன்னகர்வை தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.

இந்தக் கட்டுப்பாடு அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிர்வாக உத்தரவு குறித்து மக்கள் கருத்து தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டில் சீன நிறுவனங்களில் அமெரிக்காவின் முதலீடு 32.9 பில்லியன் டாலராக இருந்தது. 2022-ம் ஆண்டில் அது 9.7 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. நடப்பு ஆண்டில் 1.2 பில்லியன் டாலர் அளவிலேயே சீன நிறுவனங்களில் அமெரிக்கா முதலீடு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், புதிய கட்டுப்பாடு நடைமுறைக்கு வரும்பட்சத்தில், சீனாவில் அமெரிக்காவின் முதலீடு பல மடங்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.