மயிலாடுதுறையில் போலீஸ் எனக்கூறி வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் வசூல் செய்த வாலிபர் கைது!
மயிலாடுதுறை அருகே போலீஸ் எனக்கூறி வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் வசூல் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். மிரட்டல் வாலிபரை குத்தாலம் போலீசார் அடித்து இழுத்துச்செல்லும் காட்சி வாட்சப்பில் வைரலாகி வருகிறது.
மயிலாடுதுறை அருகே உள்ள மல்லியம் ரயில் நிலையம் பகுதியில் வாலிபர் ஒருவர் நின்றுகொண்டு அந்த வழியாகச் செல்பவர்களிடம் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் உங்களை யார் வெளியே வரசொன்னது என்று கூறி அவர்களை மிரட்டியுள்ளார். அவரது பைக்கில் போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.
இதைக்கண்டு மிரண்டு போனவர்கள் பயந்து கொண்டே ஓடி விட்டனர். இவர் இருவரை மிரட்டி ரூ.500 வரை வசூல் செய்துள்ளார். போலீஸ் ஒருவர் மப்டியில் மிரட்டி பணம் பறிக்கிறார் என்று கேள்விப்பட்ட ஆணை மேலகரம் ஊராட்சிமன்ற தலைவர் தேன்மொழி மற்றும் பொது மக்கள் ஒன்று திரண்டு சென்று அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்த ஐய்யப்பன் மகன் ரஞ்சித் என்பது தெரியவந்தது. உடனடியாக குத்தாலம் போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. குத்தாலம் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மல்லியம் சென்ற போலீசார் ரஞ்சித்தை லத்தியால் அடித்து ஜீப்பில் ஏற்றிச்சென்றனர். அதன் பின்னர் பைக்கை பறிமுதல் செய்து ரஞ்சித்தைக் கைது செய்தனர்.
ரஞ்சித்தை குத்தாலம் போலீசார் அடித்து அழைத்துச் செல்லும் காட்சிகள் வா ட்சப்பில் வைரலாகி வருகிறது.