5 ஆயிரம் லிட்டர் குடிநீர் டேங்கரில் சாராய ஊறல்…!
ஊரடங்கு காரணமாக கள்ளசாராய விற்பனை ஜோராக நடந்ததால் தனது குடிநீர் டிராக்டர் டேங்கரில் 5000 லிட்டர் சாராய ஊரல் போட்ட பலே சாராய வியாபாரியை திருவள்ளூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஊரடங்கு காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் சாராய விற்பனை அதிகரித்திருப்பதாக மாவட்ட காவல்துறைக்கு தொடர்புகார்கள் வந்தன. இதனால், ஆந்திர எல்லை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் சாராய ஊரல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு அழித்து வருகின்றது மாவட்ட காவல் துறை.
இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த திருவாளங்காடு அடுத்த பொன்பாடி பகுதியில் சாராயம் தயாரிக்கப்பட்டு பெரும் அளவு வினியோகம் செய்யப்படுவதக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் ரகசியமாக பொன்பாடி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பொன்பாடி மேட்டுக்காலணியில் இளைஞர்கள் சுற்றித்திரிவதை பார்த்த போலீசார் சில இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சிவகாமி என்பவரது வீட்டில் சாராயம் விற்கப்படுவதாக தகவல் தெரியவந்துள்ளது.
திடீரென சிவகாமியின் வீட்டை சுற்றிவளைத்த போலீசார் நடத்திய சோதனையில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது. மேலும் ஊரல் வாசனை தூக்கலாக நின்றிருந்த ட்ராக்டர், தண்ணீர் லாரி ஒன்றை ஆய்வு செய்துள்ளனர்.
குடிநீர் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் டேக்கரை திறந்து பார்த்த போது முழுவதும் சாராய ஊரலை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். சிவகாமியை பிடித்த போலீசார் அவரின் கூட்டாளியும் டிராக்டர் உரிமையாளருமான 45 வயது ரவியையும் கைது செய்தனர்இவர்களிடம் நடத்திய விசாரணையில் சிவகாமியும் ரவியும் ஏற்கனவே பலமுறை சாராய விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் என்று தெரியவந்தது. மேலும், ரவி சில வருடங்களுக்கு முன்பு குண்டர் சட்டத்தில் சிறை சென்று வந்ததும் தெரியவந்தது.
ரவி மூலப்பொருட்களை கொண்டு சாராயம் தயாரிக்க அதை சிவகாமி பாட்டில்களில் அடைத்து ஒரு லிட்டர் சாராயம் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட 5,000 லிட்டர் சாராயமும் கீழே கொட்டி அழிக்கப்பட்டது.
ஊரடங்கு நாள் அமலில் வந்ததில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 160 பேர் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு 120 கள்ளசாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.