EBM News Tamil
Leading News Portal in Tamil

பெற்றோர்களின் கண்களில் வலியை மட்டுமே காண்கிறோம் – மனித உரிமை செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவின் மகள்கள்..!

மனித நேய செயற்பாட்டாளரும், டாக்டர் அம்பேத்கரின் உறவினருமான ஆனந்த் டெல்டும்டே எல்கார் பரிஷாத் வழக்கில் உச்சநீதிமன்றத்தால் ஜாமின் மறுக்கப்பட்டு கைதானதைத் தொடர்ந்து, ட்விட்டரில் #donotarrestanand ட்ரெண்டானது. அதைத் தொடர்ந்து The Caravan இதழில் நாட்டு மக்களுக்காக , அவரது மகள்கள் ப்ராச்சி டெல்டும்டே மற்றும் ராஷ்மி டெல்டும்டே வெளியிட்டிருக்கும் கடிதம் தமிழில்..

மார்ச் 16-ஆம் தேதி எங்கள் தந்தையின் அடுத்த சில ஆண்டுகள் எப்படி கழிய போகின்றன என்பது உச்சநீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஏப்ரல் 6-ஆம் தேதி சிறையில் அடைத்திட அரசு காத்திருந்தது, நாங்கள் இதைக் குறித்து எழுதுவோம் என்றோ பேசுவோம் என்று கற்பனையில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. தீர்ப்பைக் கேட்ட நாளிலிருந்து தங்கள் அனுதாபங்களையும் ஆதரவையும், பிரார்த்தனைகளையும் தெரிவிக்க ஏராளமான அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தாலும் வாழ்க்கை ஸ்தம்பித்து விட்டது போல ஒரு உணர்வு நேரிடுகிறது. உறக்கமில்லா இரவுகளும், களைத்துப்போன விழிகளும் எங்கள் அன்றாட வழக்கமாகிவிட்டன. இந்தச் சூழலை எதிர்கொள்ள குடும்பமாக சேர்ந்து நாங்கள் முயன்றாலும் தொடர்ச்சியான விரக்தியும், கையறு நிலையும், பதற்றமும் தொற்றிக்கொண்டுள்ளன. ஒரு அப்பாவியின் கைது அவரது குடும்பத்திற்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் இதைத்தான் செய்யும்.

‘தோழர் ஆனந்த்’ என்ற வார்த்தைகளைத் தவிர வேறெந்த விபரமும் இல்லாத , சினிமா பாணியில் இட்டுக்கட்டப்பட்ட கடிதங்கள் 2018-இல் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில், செய்தி நிறுவனங்களின் கேமரா முன்னிலையில் வெளியிடப்பட்டதிலிருந்து தொடங்கியது இது. இன்று எங்கள் தந்தையின் கைது வரை வளர்ந்திருக்கிறது. நடந்த நிகழ்வுகளை தொகுத்து பார்க்கும்போது எங்களுக்கு இரண்டே இரண்டு கேள்விகள்தான் எழுகின்றன; முதல் கேள்வி, மற்றொருவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்திலும் குறிப்பிடப்பட்ட ஆனந்த் என்கிற முதல் பெயரை கொண்டிருக்கின்ற ஒரே காரணத்தினால் எங்கள் தந்தையை மட்டும் எப்படி தொடர்புபடுத்திக்கொள்ள முடியும்? ஆனந்த் என்கிற பெயரை மட்டுமே கொண்டு எங்கள் தந்தை ஆனந்த் டெல்டும்டேயை மட்டும் எப்படி தொடர்புபடுத்த முடியும்? எங்களை எரிச்சலூட்டும் இரண்டாவது கேள்வி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தைப் போட்டது – அவருக்கு எதிரான உண்மையான ஆதாரங்கள் எதுவும் இல்லாத சூழலில், ஒரு அப்பாவி மனிதன் பிணைக்கான வாய்ப்பு இல்லாது எதற்காக சிறையில் தள்ளப்பட வேண்டும்? எங்களுக்கு வருத்தம் தருகின்ற செய்தி என்னவென்றால் , வரப்போகிற ஆண்டுகளில் நடக்கப் போகிற விசாரணையின் மூலம்தான் குற்றம் செய்தார்களா என்று தெரியவரும். அப்படியிருந்தும், விசாரணையே முடியாமல் எங்கள் தந்தை உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரது அரசியல் சாசன உரிமைகள் மற்றும் குடி உரிமைகளை அராஜகமாக பறித்துவிடமுடிகிறது என்பதுதான்.

ஆகஸ்ட் 2018-ல் தொடங்கிய இந்த சோதனை காலத்திலிருந்து, சட்டத்திற்கு கட்டுப்பட்ட குடிமக்கள் என்கிற முறையில் நாங்கள் எங்கள் வீடுகளை சோதனை செய்வதற்கு அமைதியான முறையில் அனுமதித்திருக்கிறோம், எங்கள் தந்தை இரண்டு முறை பலமணிநேரம் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தி கொண்டிருக்கிறார். மேலும் அவர் தனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுப்பதற்கு போதுமான ஆதாரங்களை அரசு தரப்புக்கு வழங்கியிருக்கிறார். ஆயினும் அரசின் கோபத்திற்கு முகம் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கிறோம், அதுமட்டுமில்லாமல் , சிலர் தாங்கள் தாக்கி எழுதும் எங்கள் தந்தை உள்ளிட்ட குற்றம் சுமத்தப்பட்ட நபர்களின் பங்களிப்பை குறித்து கொஞ்சமும் அறிவில்லாது, சமூக ஊடகங்களில் அவர்களை இழிவுபடுத்தும் விதமாக எழுதி வருகின்றனர்.