EBM News Tamil
Leading News Portal in Tamil

கொரோனா அச்சம் – கேம் விளையாடும் போது இடைவிடாது இருமிய நண்பனை துப்பாக்கியால் சுட்ட நண்பன்…!

செல்போனில் கேம் விளையாடும் போது இடைவிடாது இருமிக்கொண்டிருந்த நண்பனை, துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நொய்டாவில் நடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. மஹாராஷ்டிரா முதலிடத்திலும், தலைநகர் டெல்லி இரண்டாவது இடத்திலும், தமிழகம் மூன்றாவது இடத்திலும் பாதிப்பு எண்ணிக்கைப்படி உள்ளன.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் இரண்டாவது முறையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், செல்போனில் பரவும் வதந்தி உள்ளிட்டவற்றால் கொரோனா தொடர்பான அச்சம் பொது மக்களிடையே எழுந்துள்ளது.

தலைநகர் டெல்லி அருகே உள்ள நொய்டா பகுதியில் தயாநகர் என்ற இடத்தில் கொரோனா அச்சம் துப்பாக்கிச்சூடு வரைக்கும் சென்றுள்ளது. போலீசார் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 24 வயது ப்ரவீஷ் என்பவர் தனது நண்பர்கள் உடன் நேற்றிரவு செல்போனில் கேம் விளையாடியுள்ளார்.

அப்போது, அவர் தொடர்ந்து இருமிக்கொண்டே இருக்க சக நண்பரான ஜெய்வீர் என்பவர் கோபம் அடைந்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் நீடிக்க, திடீரென ஜெய்வீர் தன்னிடம் இருந்த துப்பாக்கியைக் கொண்டு ப்ரவீஷை நோக்கி சுட்டுள்ளார்.

துப்பாக்கிக் குண்டு பிரவீஷின் காலில் துளைக்க, அவர் வலியால் அலறியுள்ளார், துப்பாக்கி வெடித்த சப்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அங்கு கூட, ஜெய்வீர் தப்பி ஓடியுள்ளார். உடனே, பிரவீஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்வீர் உள்பட சம்பவ இடத்தில் இருந்தவர்களை தேடி வருகின்றனர்.