மது பாட்டில் திருட்டு… போலி மது விற்பனை.. கள்ளச்சாராய ஊறல்கள்..! டாஸ்மாக் மூடப்பட்டதால் தொடர் குற்றங்கள்
ஊரடங்கு நடைமுறைக்கு வந்த கடந்தமார்ச் 24-ம் தேதி நாகையைச் சேர்ந்த இருவர் காரைக்காலில் இருந்து குறைந்த விலைக்கு மது பாட்டில்களை வாங்கி கடத்தி வந்தனர். அப்போது, செல்லூர் அருகே எதிரே வந்த ஆட்டோவில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் மதுபாட்டிலை கடத்தி வந்த இருவரும் படுகாயமடைந்தனர். அப்போது அவ்வழியே சென்றவர்கள் விபத்துக்குள்ளானவர்களை மீட்காமல் சிதறிய மதுபாட்டில்களை ஆர்வத்துடன் எடுத்துச் சென்றனர்.
அதே 24-ம் தேதி காரைக்காலில் இருந்து நாகைக்கு காரில் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 46 அட்டைபெட்டிகளில் இருந்த 2,208 மதுபாட்டில்கள், 100 லிட்டர் எரிசாராயம் கடத்தி வரப்பட்டன. 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார், மதுபாட்டில்கள், எரிசாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 24ஆம் தேதி தஞ்சை சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் 144 தடை உத்தரவுக்கு பிறகு கள்ளச்சந்தையில் விற்ற இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மதுபாட்டில்களும், 52 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.
மார்ச் 24 ஆம் தேதி சீர்காழியில் டாஸ்மாக் கடை அடைப்பதற்கு முன்னர் அதிலிருந்து 55 பெட்டிகள் கொண்ட 2,640 மதுபான பாட்டில்களை காரில் ஏற்றி கள்ளச்சந்தையில் விற்க முயன்ற கடை ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த மார்ச் 27ஆம் தேதி நாமக்கல்லில் குடிநீர் ஆலை கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,812 மதுப்பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மது பாட்டில்களை பதுக்கிய இராமாபுரம் புதூரைச் சேர்ந்த சையத் முஸ்தபா தப்பி ஓட, கார் ஓட்டுநர் அசேன் மட்டும் சிக்கினார்.அதே 27ஆம் தேதி, வேலூர் மாவட்டம் குடியாத்தம், அடுத்த கார்த்திகேயபுரம் பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த கள்ளச்சாராய பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய சாராய வியாபாரியை தேடி வருகின்றனர்.
கடந்த 28ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மது பாட்டில்களை பதுக்கிய கனகராஜன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த மார்ச் 29ஆம் தேதி தமிழக கேரள எல்லையில் தென்மலை வனப்பகுதியில் காய்ச்சப்பட்ட 100 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பலை தேடி வருகின்றனர்.
மார்ச் 29ஆம் தேதி மயிலாடுதுறை அடுத்த ஆக்கூர் அருகே மண்ணில் புதைத்து வைத்து கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட 500 டாஸ்மாக் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடந்த மார்ச் 29ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தேர்வழி ஊராட்சியில் உள்ள டாஸ்மாக் கடையில் 10 பெட்டிகளில் இருந்த 240 மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
கடந்த மார்ச் 30ஆம் தேதி, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செண்பகதோப்பு சாலையில் உள்ள, இந்திரா நகர் பச்சை காலனி பகுதியில் ஒரு வீட்டில் 150 லிட்டர் கள்ளச் சாராய ஊறலை கைப்பற்றி போலீசார் அழித்தனர். மேலும் ஊறல் போட்டு சாராயம் காய்ச்ச இருந்த கணவன்-மனைவியை கைது செய்தனர்.
கடந்த மார்ச் 30ஆம் தேதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் சோதனை நடத்தியதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 650 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர், இருவர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த மார்ச் 30ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் டாஸ்மாக் மதுவை பதுக்கி சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்ததனர். அவர்களிடம் இருந்து 3,036 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதே 30ஆம் தேதி கோவை சிங்காநல்லூர் பகுதியில் மதுபானக் கடையின் பூட்டை உடைத்து 500 மதுப்பாட்டில்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றனர்.
கடந்த31ஆம் தேதி திருச்சி வரகனேரி அருகே டாஸ்மாக் கடையிலும், உறையூரில் உள்ள டாஸ்மாக் கடையிலும் பூட்டை உடைத்து 2 லட்ச ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை மது பிரியர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
டாஸ்மாக் கடைகளில் தொடர் திருட்டு நடைபெற்று வருவதால் நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா முழுவதும் உள்ள 13 டாஸ்மாக் கடைகளின் சரக்குகள் அனைத்தும் கல்யாண மண்டபம் ஒன்றுக்கு மாற்றப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுளளது.