கொரோனா பரவ காரணமே தப்லீக் ஜமாத்.. உ.பி.யில் பிரசாரம் செய்த இளைஞர் சுட்டுக் கொலை- அரசு நிதி உதவி!
லக்னோ: கொரோனா பரவுவதற்கு காரணமே டெல்லியில் தப்லீக் ஜமாத் நடத்திய மாநாடுதான் என உத்தரப்பிரதேசத்தில் பிரசாரம் செய்த இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
டெல்லியில் தப்லீக் ஜமாத் நடத்திய மாநாட்டில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா தொற்று நோய் பாதிப்பு இருப்பதாக அரசுகள் தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக பல்வேறு கருத்துகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மேலும் கொரோனா என்பது தொற்று நோய். இதனை மதரீதியாக பிரசாரம் செய்யக் கூடாது என அனைத்து தரப்பினரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தின் பிரக்யாராஜில் இளைஞர் ஒருவர் தமது பகுதியில் தப்லீக் ஜமாத் மாநாட்டினால்தான் இந்தியாவில் கொரோனா பரவியது என பிரசாரம் செய்திருக்கிறார்.
இந்நிலையில் இன்று தமது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த அந்த இளைஞரை நோக்கி மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் துப்பாக்கிக் குண்டுகள் தலையில் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அந்த நபர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.