சென்னையில் பயங்கரம்: 15 வயது சிறுவனைக் கொன்று சுடுகாட்டில் புதைத்த இளைஞர்கள்; 6 மாதங்களுக்குப் பின் சிக்கினர்
சென்னை சூளைமேட்டில் 15 வயது சிறுவனைக் கொன்று சுடுகாட்டில் குழி தோண்டிப் புதைத்த இளைஞர்கள் போலீஸ் பிடி இறுகுவதைக் கண்டதும் சரணடைந்தனர்.
சென்னை சூளைமேடு சித்ரா அபார்ட்மென்ட் பிளாட்பாரத்தில் வசிப்பவர் பெருமாள் ( 55). இவரது மகன் ராஜேஷ் (15). இவர் தந்தையுடன் கூலி வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி 14 பொங்கலன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவே இல்லை.
மகனை பல இடங்களில் தேடிய பெற்றோர் இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்ற போலீஸார் அவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில் போலீஸார் பலரையும் பிடித்து விசாரித்து வந்தனர்.
காணாமல் போன ராஜேஷுக்கு யாருடன் தொடர்பு, அவர் யாருக்கு நெருக்கம், ராஜேஷ் கடைசியாக எங்கு சென்றார் போன்ற விவரங்களைச் சேகரித்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் ராஜேஷ் சமூக விரோதிகள் சிலருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. கொலை, வழிப்பறி வழக்கில் சமீபத்தில் கைதான சிலருக்கு சின்ன சின்ன வேலைகள்செய்து கொடுக்கும் வேலையை ராஜேஷ் செய்து வந்துள்ளார். சமூக விரோதிகளை ஹீரோவாக நினைக்கும் வழக்கமான பால பருவப் பிள்ளையாக ராஜேஷ் வலம் வந்துள்ளார்.
இந்நிலையில் ராஜேஷ் காணாமல் போனதால் சம்பந்தப்பட்டவர்களின் எதிரிகள் யாராவது கொலை செய்திருக்கலாமோ என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் ராஜேஷுடன் கடைசியாகத் தொடர்பில் இருந்த ஒருவரை போலீஸார் காவல் நிலையம் அழைத்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.
பின்னர் அவரை போலீஸார் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று மாலை சூளைமேடு கிழக்கு நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்த பரத்குமார் (19) மற்றும் அதே பகுதியில் வசிக்கும் அவரது நண்பர்கள் 17 வயதுடைய 2 பேர் போலீஸில் சரணடைந்தனர்.
ராஜேஷ் காணாமல் போன விவகாரத்தில் போலீஸ் தேடுவதை அறிந்து தாங்களாக சரணடைவதாகத் தெரிவித்த அவர்களிடம் ராஜேஷ் எங்கே என போலீஸார் விசாரித்தபோது அவர்கள் கூறிய தகவல் போலீஸாரை திடுக்கிட வைத்தது.
“சார் அவனை ஆறு மாதத்துக்கு முன்பே கொன்று புதைத்துவிட்டோம் சார்” என சாதாரணமாக அவர்கள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் அவர்களை மேலும் விசாரித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது,
பரத்குமார் மற்றும் அவரது மூன்று நண்பர்கள் மூவருக்கும் 17 வயது. அனைவரும் சூளைமேடு சுடுகாட்டில் வெட்டியானாக வேலை செய்து வருகின்றனர். காணாமல் போன ராஜேஷ் தனது குருவான சமூக விரோதிகளிடம் எப்படி வழிப்பறி செய்யலாம் எனப் பயிற்சி எடுத்து தானும் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 14-ம் தேதி அன்று கையில் கத்தியுடன் சூளைமேடு சுடுகாட்டுக்குள் ராஜேஷ் சென்றுள்ளார். அப்போது அங்கு பரத்குமார் உள்ளிட்ட 4 நண்பர்களும் இருந்துள்ளனர். ராஜேஷ் அவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். அப்போது நான்கு பேரும் சின்னப்பையன் ஒருவன் தங்களை மிரட்டுவதா என்று ராஜேஷைத் தாக்கியுள்ளனர்.
இந்த மோதலில் நான்கு பேரில் தற்போது தலைமறைவாக இருக்கும் சிறுவன் ராஜேஷின் கையை முறுக்கி ராஜேஷிடமிருந்த கத்தியால் அவரது கழுத்தில் குத்த ராஜேஷ் கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த அவரை காலால் மிதித்தே கொன்றுள்ளனர். பின்னர் பிணத்தை அங்கேயே குழி தோண்டி புதைத்துள்ளனர்.
பின்னர் 4 பேரும் யாரிடமும் யாரும் எதையும் உளறிவிடக்கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொண்டு பிரிந்துள்ளனர். அதன்படி கடந்த 6 மாதமாக ராஜேஷை போலீஸார் தேடுவது தெரிந்தும் சத்தம் காட்டாமல் இருந்துள்ளனர். ஆனால் போலீஸார் பிடி இறுகியதால் தாங்கள் சிக்கிக் கொள்வோம் என்பதால் தாங்களாகவே நேரில் வந்து சரணடைந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
நான்கு பேரில் ஒரு சிறுவன் மட்டும் தலைமறைவாக உள்ளார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். பிடிபட்டவர்களை போலீஸார் சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று ராஜேஷின் உடலைத் தோண்டி அங்கேயே உடற்கூறு ஆய்வு நடத்த உள்ளனர். நான்கு பேர் சேர்ந்து ஒரு சிறுவனை கொன்று புதைத்துவிட்டு ஆறுமாத காலம் போலீஸார் பிடியில் சிக்காமல் இருந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.