எச்சரிக்கை! ஒர்க் ஃப்ரம் ஹோம் செய்பவரா நீங்கள்? – அதிகரிக்கும் இணைய தாக்குதல்
ஒர்க் ஃப்ரம் ஹோம் மூலம் வேலை செய்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இல்லாவிட்டால் பல்வேறு இணையத் தாக்குதல்களை சந்திக்க நேரிடும் என்று மென்பொருள் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக ஐடி நிறுவனங்கள், வங்கி, ஊடகம் உள்ளிட்ட பலதுறை சார்ந்த ஊழியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து கம்ப்யூட்டரில் வேலை செய்து வருகின்றனர். இதற்காக அந்தந்த நிறுவனங்களின் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் போன்றவற்றை வீட்டுக்கு எடுத்து வந்து வேலை செய்கிறார்கள்.
இந்த நேரத்தில் அவர்களது கம்ப்யூட்டரில் இணையத் தாக்குதல்கள் தற்போது அதிகரிக்கத் தொடங்கி இருப்பதாக தெரியவருகிறது. பல இடங்களிலிருந்து ஹேக்கர்கள் இதை உன்னிப்பாக கவனித்து கம்ப்யூட்டரில் இருக்கும் பல்வேறு தகவல்களை திருடுவது,அழிப்பது போன்ற சைபர் அட்டாக் அதிகரித்துள்ளது என்கின்றனர் மென்பொருள் வல்லுநர்கள்.
குறிப்பாக கொரோனா பாதிப்பு, தடுப்பு என்று பொதுமக்களின் கவனத்தை அதிகளவில் ஈர்க்கக்கூடிய பெயரில் மெயில்கள் வருவதாக கூறுகின்றனர்.மெயிலை பார்க்கும் போது அதனுடன் வரும் அட்டாச்மெண்ட் எதையும் உள்ளே சென்று பார்க்க வேண்டாம் என்கிறார்கள்.
மெயிலுடன் உடன் வரும் அட்டாச்மெண்ட்டை திறந்தால் உடனடியாக கம்ப்யூட்டரில் வைரஸ் தொற்று ஏற்பட்டு பல்வேறு தகவல்களை திருட வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். அலுவலகத்தில் வேலை செய்யும்போது தொழில்நுட்ப வல்லுநர்கள் அதற்கு தேவையான பாதுகாப்பு, அப்டேட் மற்றும் வைரஸ் எதிர்ப்பு உள்ளிட்ட முறைகளை கையாள்வார்கள்.
ஆனால் வீட்டிலிருந்து வேலை செய்யும்போது அத்தகைய பாதுகாப்பு இல்லை என்பதால் இணைய தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. கம்ப்யூட்டரில் வரும் தாக்குதல் உங்கள் அலுவலகத்தில் இருக்கக்கூடிய மற்ற கம்ப்யூட்டர்களுக்கும் பரவக்கூடிய அபாயம் உள்ளது.எனவே தேவையான வைரஸ் தடுப்பு ஆப் மற்றும் அப்டேட்டை எடுத்துக்கொண்டால் இதிலிருந்து தப்பிக்க முடியும் என்பது நிபுணர்களின் அறிவுரை.