EBM News Tamil
Leading News Portal in Tamil

லிங்ட்இன் இந்திய உறுப்பினர்கள் 5 கோடி!

இணையத்தின் வளர்ச்சிக்குப் பிறகு வேலைதேடும் படலம் வேறொரு பரிணாமத்தை எட்டிவிட்டது. ஒவ்வொரு அலுவலகத்தின் கதவையும் தட்டி வேலைவாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டு ரெசியூம்களை கொடுத்துவிட்டு காத்திருக்கவேண்டிய காலம் மலையேறிவிட்டது.
நமது படிப்பு சார்ந்த நூற்றுக்கணக்கான வேலைகளை ஒற்றைக் கிளிக்கில் கண்முன் காட்டும் வகையில் ஆன்லைன் வேலைவாய்ப்பு தளங்கள் வந்துவிட்டன. சமீபத்தில் லிங்ட் இன் தளத்தைப் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 5 கோடியாக அதிகரித்துள்ளது.
லிங்ட் இன்னைத் தவிர நௌக்ரி, மான்ஸ்டர் இந்தியா என பல வேலைதேடும் தளங்கள் இந்தியாவில் உள்ளன. இருப்பினும் லிங்ட் இன் இந்த அளவுக்கு பரவலான கவனம்பெறக் காரணம் அது மனிதர்களுக்கிடையேயான சமூக பிணைப்பின் அடிப்படையிலான ஒரு தளம் என்பதாலேயே.
ஒரு சாதாரண ஊழியர், பெரு நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளுடன் தொழில் ரீதியிலான நண்பராகும் வாய்ப்புகளை லிங்ட் இன் தருகிறது. ஒரு குறிப்பிட்ட துறையை சார்ந்தவர்கள் அந்தத் துறை சார்ந்த பலபேரை அறிமுகம் செய்துகொள்ள லிங்ட் இன் வழிவகுக்கிறது.
இதுதவிர மற்ற வேலை தேடும் தளங்களில் இல்லாத பல்வேறு வசதிகள் லிங்ட் இன் தளத்தில் காணப்படுகின்றன. டெய்லி ரன் டவுன் என்ற பெயரில் தொழில் அதிபர்களும் ஊழியர்களும் கட்டாயம் அறிந்துவைத்திருக்க வேண்டிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை தினமும் காலையில் அளிக்கிறது லிங்ட் இன். இதுதொடர்பாக லிங்ட்இன் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களுக்குள் உரையாடிக் கொள்வதற்கான வசதியும் உள்ளது.
குறிப்பிட்ட தொழில் துறையில் வெற்றிபெற்றவர்கள் தாங்கள் எவ்வாறு வாழ்க்கையில் இந்த இடத்தை அடைந்தோம் என்பதை விளக்கும் ‘ஹவ் ஐ காட் ஹியர்’ , ‘செகண்ட் இன்னிங்ஸ்’ போன்ற வீடியோ வடிவிலான நிகழ்ச்சிகளையும் லிங்ட்இன் வழங்குகிறது. இந்திய வாடிக்கையாளர்களுக்காக தங்களது பெங்களூரு அலுவலகத்திலிருந்து இந்த நிகழ்ச்சிகளை வழங்குகிறது.
முன்னணி நிறுவனங்கள் மற்றும் முக்கிய தொழில் அதிபர்களை டாப் கம்பெனிஸ், டாப் வாய்சஸ் என பட்டியலிட்டுள்ளது. இது கல்லூரி மாணவர்கள், புதிதாக வேலை தேடுவோர்கள் என பல தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடியதாக உள்ளது.
அரசுகள் மற்றும் பொருளாதார நிபுணர்களுக்கு உதவக்கூடிய சில முன்னெடுப்புகளையும் லிங்ட்இன் செய்துள்ளது. எக்கனாமிக் கிராப் என்கிற பெயரில் ஒரு குறிப்பிட்ட துறையில் உள்ள பணியாளர் எண்ணிக்கை, அதிக வேலைவாய்ப்புள்ள துறைகள், தேவைப்படும் திறன்கள் என பலவற்றையும் தொகுத்துள்ளது. படித்த அனைவருக்கும் வேலை கிடைப்பதில் உள்ள இடைவெளியைக் குறைக்கும் பொருட்டு ஸ்கில் இந்தியா திட்டத்தின்கீழ் ஐஎல் அண்ட் எஃப்எஸ் ஸ்கில்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்துவருகிறது. கடந்த மாதம் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்காக கேரள அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றையும் லிங்ட் இன் செய்துகொண்டுள்ளது.
உலக அளவில் 56.2 கோடி உறுப்பினர்களைக் கொண்டுள்ள லிங்ட் இன் நிறுவனத்தின் இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கை நவம்பர் 2009-ல் வெறும் 34 லட்சமாகத்தான் இருந்தது. ஆனால் இன்று 5 கோடி உறுப்பினர்கள் என்ற நிலையை எட்டியுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குப் பிறகு லிங்ட் இன் மிக வேகமாக முன்னேறிவரும் நாடுகளில் ஒன்று இந்தியா.
இளைஞர்களை அதிகம் கொண்ட, மிக விரைவில் சீனாவின் மக்கள்தொகையை முந்த இருக்கிற இந்தியாவில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை வரும்காலங்களில் மேலும் அதிகரிக்க இருக்கிறது. இதனை மிகச் சிறப்பாக முன்கூட்டியே கணக்கிட்டு, பல்வேறு சமூக ஒருங்கிணைப்பு திட்டங்களின் மூலம் அதனை திறம்பட செயலாக்கியது லிங்ட் இன் அடைந்துவரும் வெற்றிக்கான அடிப்படைக் காரணம் என்று சொல்லலாம். மற்ற நிறுவனங்கள் மக்களை ஒருங்கிணைப்பதை செய்யாமல் வெறும் தகவல்களை மட்டும் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி சறுக்கிய இடமும் இதுவே.