130 கிலோமீட்டருக்கு ரூ.700 மட்டுமே செலவு: அமெரிக்காவில் வெற்றிகரமாக பறந்த பயணிகள் மின்சார விமானம் | Electric passenger plane successfully flies in the US
130 கிலோமீட்டர் தூரத்துக்கு மின்சார பயணிகள் விமானம் வெற்றிகரமாக பறந்து சாதனை படைத்த நிகழ்வு அமெரிக்காவில் நடந்துள்ளது. இந்த விமானம் பறக்க 130 கிலோமீட்டருக்கு ரூ.700 மட்டுமே செலவாகும் எனத் தெரியவந்துள்ளது.
உலகிலேயே முதன்முதலாக முழுக்க முழுக்க மின்சாரத்தால் (பேட்டரி) இயங்கக்கூடிய பயணிகள் விமானத்தை அமெரிக்காவைச் சேர்ந்த பீட்டா டெக்னாலஜீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆலியா சிஎக்ஸ் 300 என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானம் அண்மையில் அமெரிக்காவின் ஈஸ்ட் ஹாம்ப்டன் பகுதியிலிருந்து நியூயார்க்கிலுள்ள ஜான் எப். கென்னடி(ஜேஎப்கே) விமான நிலையத்துக்கு வெற்றிகரமாக இயக்கப்பட்டது.
130 கிலோமீட்டர் தூரத்துக்குப் பறந்த இந்த விமானத்துக்கு எரிபொருள் செலவு ரூ.700 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. விமானப் போக்குவரத்தில் இது மிகப்பெரும் புரட்சியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஃபாக்ஸ் நியூஸ் தகவல் தெரிவித்துள்ளது.
வழக்கமாக ஹெலிகாப்டர் மூலம் இந்த தூரத்துக்கு சென்றால் ரூ.13,885(160 அமெரிக்க டாலர்கள்) செலவாகும். ஆனால் இந்த விமானத்தில் ரூ.694(8 அமெரிக்க டாலர்கள்) மட்டுமே செலவாகியுள்ளது. இந்த பயணிகள் விமானத்தில் 4 பயணிகள் பயணித்தனர். மேலும் இதில் பயணிக்கும்போது விமான இன்ஜின், புரொபல்லர் சத்தம் இல்லவே இல்லை என்று பயணிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து பீட்டா டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான (சிஇஓ) கைல் கிளார்க் கூறும்போது, “இது 100 சதவீத மின்சார விமானமாகும். தற்போதுதான் ஈஸ்ட் ஹாம்ப்டனிலிருந்து ஜேஎப்கே விமான நிலையத்துக்கு வெற்றிகரமாக பறந்துள்ளது. அமெரிக்காவில் முழுக்க முழுக்க மின்சார பயணிகள் விமானத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளோம்.
மேலும், இதற்கு குறைந்த அளவே செலவாகிறது. மிகக் குறைந்த செலவில் இந்த விமானத்தில் பயணிக்கலாம்” என்றார்.
விரைவில் அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகத்திடமிருந்து(எஃப்ஏஏ) சான்றிதழை பீட்டல் டெக்னாலஜீஸ் பெறவுள்ளது. மேலும் ஒரு முறை இந்த பிளேனை சார்ஜ் செய்யும் 250 நாட்டிக்கல் மைல் தூரத்துக்கு பறக்க முடியும்” என்றார்.