EBM News Tamil
Leading News Portal in Tamil

ஏஐ வரவால் வேலைவாய்ப்புகள் பறிபோகும்: மும்பை ஆட்டோம்பர்க் நிறுவனர் கருத்து | Mumbai founder raises alarm over AI taking away white-collar jobs in India


இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பரவலாக பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் அது 40-50 சதவீத அலுவலக வேலைவாய்ப்புகளை தட்டிப்பறிக்கும் என்று மும்பையைச் சேர்ந்த ஆட்டோம்பர்க் நிறுவனத்தின் நிறுவனர் அரிந்தம் பால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் லிங்டின் தளத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது கூறியதாவது: செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) வரவு இந்தியாவில் ஒயிட்-காலர் ஜாப் எனப்படும் அலுவலக பணி வாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் பிபிஓ துறைகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். ஏஐ வரவால் அலுவலக வேலைவாய்ப்புகளில் 40-50 சதவீதம் பறிபோகும் சூழல் உருவாகும். இது நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவகளுக்கு மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய சவாலை உருவாக்கும்.

பொதுவாக இந்தியாவின் தயாரிப்பு துறை நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் ஏஐ வரவு பிரச்சினையின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஐ பயன்பாட்டை அதிகரிப்பதால் உற்பத்தி திறன் அதிகரிப்பதுடன் நிறுவனத்தின் லாபமும் மேம்படும் என்ற வகையில் எல்லா கார்ப்பரேட் நிறுவனங்களும் மகிழ்ச்சியாக உள்ளன. ஆனால், அவை ஒன்றை மட்டும் வசதியாக மறந்துவிடுகின்றன. வேலையில்லாமல் நுகர்வோர் கையில் பணம் இருக்காது. நுகர்வோர் கையில் பணம் இல்லை என்றால் நிறுவனங்களுக்கு விற்பனை நடக்காது. இந்த சுழற்சியை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அரிந்தம் பால் தெரிவித்துள்ளார்.