இந்தியாவில் ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவை: எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் – ஏர்டெல் இடையே ஒப்பந்தம் | Airtel signs deal with SpaceX to bring Starlink internet to India
இந்தியாவில் ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவையை வழங்குவதற்காக எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் ஏர்டெல் கைாகோக்கிறது.
இதுகுறித்து ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஸ்டார்லிங்கின் அதிவேக இண்டர்நெட் சேவையை இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக ஏர்டெல் நிறுவனம் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் உடன்பாடு செய்து கொண்டுள்ளது. எலான் மஸ்க் நிறுவனத்துடன் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதல் ஒப்பந்தம் இதுவாகும். மேலும், ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவில் ஸ்டார்லிங்கை விற்பது அதன் சொந்த அதிகாரத்தை பெறுவதற்கு உட்பட்டது.
இதுகுறித்து பார்தி ஏர்டெல் நிர்வாக இயக்குநர் கோபால் விட்டல் கூறுகையில், “ ஸ்பேஸ்எக்ஸ் உடன் இணைந்து ஸ்டார்லிங் இணைய சேவையை இந்தியாவில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்ளுக்கு வழங்குவது நிறுவனத்தின் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க மைல்கல். அடுத்த தலைமுறை செயற்கைக்கோள் இணைப்புக்கான எங்களின் உறுதிப்பாட்டை இது மேலும் நிரூபிப்பதாக அமைந்துள்ளது” என்றார்.
இந்த உடன்பாட்டின்படி, ஏர்டெல்லின் ரீடெயில் ஸ்டோர்களில் ஸ்டார்லிங் உபகரணங்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான வழிகள் ஆராயப்பட உள்ளன. சமூகங்கள், பள்ளிகள், சுகாதர மையங்களை இணைப்பது மட்டுமின்றி, தொலைதூர கிராமப்புற பகுதிகளுக்கும் இந்த சேவையை கொண்டு சேர்ப்பது குறித்தும் ஆராயப்படும்.