“டிஜிட்டல் முறைக்கு மாறுவதில் ஊடகத் துறைக்கு உதவ அரசு தயார்” – அஸ்வினி வைஷ்ணவ் | Ready to help media industry in transition from traditional to digital: Ashwini Vaishaw
புதுடெல்லி: பாரம்பரிய முறையில் இருந்து டிஜிட்டலுக்கு ஊடகங்கள் மாற ஊடகத் துறைக்கு உதவ அரசாங்கம் தயாராக இருப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
Storyboard18-DNPA மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய அஸ்வினி வைஷ்ணவ், “பாரம்பரிய ஊடகங்கள், புதிய யுக மாற்றத்துக்கு ஏற்ப அவை தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், இளைய தலைமுறையினர், பாரம்பரிய ஊடகங்களிலிருந்து டிஜிட்டல் ஊடகங்களுக்கு முற்றிலுமாக மாறிவிட்டனர்.
இதை கருத்தில் கொண்டு பாரம்பரிய ஊடகங்கள், டிஜிட்டலுக்கு மாறும்போது அவை வேலைவாய்ப்பு, படைப்பாற்றல், பதிப்புரிமை சிக்கல்கள், உள்ளடக்க படைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு நியாயமான இழப்பீட்டை உறுதி செய்தல் தொடர்பாக பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இந்த மாற்றத்தின் போது தேவைப்படும் எந்தவொரு ஆதரவையும் வழங்க நாங்கள் முழுமையாகத் தயாராக உள்ளோம்” என தெரிவித்தார்.
டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் சங்கம் (DNPA) இந்தியா முழுவதும் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் இருந்து 20 ஊடக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.