EBM News Tamil
Leading News Portal in Tamil

இந்தியாவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் தடை செய்யப்பட்ட 36 சீன செயலிகள்! | previously banned 36 Chinese apps to comeback again in India


சென்னை: இந்தியாவில் ஏற்கெனவே தடை செய்யப்பட்ட சீன தேசத்தின் 36 செயலிகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2020-ல் தேச பாதுகாப்பு கருதி சீன தேசத்தின் சுமார் 267 மொபைல் செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. டிக்-டாக் துவங்கி பல்வேறு செயலிகள் இதில் அடங்கும். அதோடு இல்லமால் சீன தேசத்துடன் தொடர்பு கொண்ட மற்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் மொபைல் செயலிகளும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில் ஏற்கெனவே தடை செய்யப்பட்ட சீன தேச செயலிகளில் சுமார் 36 செயலிகள் இந்தியாவில் மீண்டும் பயன்பாட்டுக்கு கிடைத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இந்த செயலிகளை டவுன்லோட் செய்யலாம் எனவும் தகவல்.

கேமிங், ஷாப்பிங், எண்டர்டெயின்மெண்ட், ஃபைல் ஷேரிங், கன்டென்ட் கிரியேஷன், ஸ்ட்ரீமிங் தளங்கள் என இந்த மொபைல் அப்ளிகேஷன்களின் கேட்டகிரி நீள்கிறது. தடை செய்யப்பட்ட செயலிகள் புதிய பெயரிலும், லேசான மாற்றத்துடனும் கம்பேக் கொடுத்துள்ளது எனவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். லோகோ, பிராண்ட், ஓனர்ஷிப் உரிமை போன்ற விவரங்கள் இதில் மாற்றப்பட்டடுள்ளதாக தெரிகிறது. இப்படி இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீன செயலிகளின் வடிவமைப்பாளர்கள் அதன் க்ளோன் வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளனர்.

ஃபைல் ஷேரிங் செய்ய உதவும் Xender செயலி, ஸ்ட்ரீமிங் செயலிகளான மேங்கோ டிவி, யோக்கூ, ஷாப்பிங் செயலர் Taobao உள்ளிட்ட செயலிகள் தற்போது இந்தியாவில் பயன்பாட்டுக்கு கிடைக்கிறது என செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

2020-ல் தடை செய்யப்பட்ட பப்ஜி செயலிக்கு மாற்றாக அதன் இந்திய பதிப்பாக பிஜிஎம்ஐ வெளிவந்தது. அந்த செயலியும் இடையில் தடையை எதிர்கொண்டது. இருப்பினும் அந்த தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.