EBM News Tamil
Leading News Portal in Tamil

“இதழியலுக்கு ஏஐ துணை புரியலாம், ஆனால்…” – பீட்டர் லிம்போர்க் கருத்து | AI can help with journalism, but… – Peter Limbourg  opinion


சென்னை: “இதழியலுக்கு செயற்கை நுண்ணறிவு துணை புரியலாம். ஆனால், என்றும் அவை பத்திரிகையாளர்களின் செய்தியளிக்கும் ஆற்றலுக்கு மாற்றாக வரமுடியாது” என்றார் Deutsche Welle நிறுவனத்தின் இயக்குநர் பீட்டர் லிம்போர்க்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், ஊடகங்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் குறித்து மாணவர்களிடையே ஜெர்மனி அரசின் பொது ஒளிபரப்பு நிறுவனமான DW-இன் இயக்குநர் பீட்டர் லிம்போர்க் உரையாற்றினார். ‘மேற்கத்திய ஊடகங்களுக்கு சவாலாக விளங்கும் உலக சூழ்நிலைகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில், பேசிய அவர், சர்வதேச ஊடகங்களின் பொறுப்பு மற்றும் இன்றைய காலகட்டத்தில், அவை எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்கள் குறித்து விவரித்தார்.

அவர் தனது உரையில், “எங்கள் நிறுவனம் கற்பிப்பதையும், விழிப்புணர்வு ஊட்டுவதையும் மட்டுமே செய்யாமல், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு இடையிலான கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கிறது. எங்களுக்கு நண்பர்கள் இல்லை, குறிப்பாக அரசுகளிடம் சுமுக உறவு இல்லை. சில பிராந்தியங்களில், எங்கள் தகவல் ஒளிபரப்பு தடுக்கப்படுவதுடன், எங்கள் இருப்பை வரவேற்பதில்லை.

சமூக வலைதளங்கள் இளைய தலைமுறையினரை அடைவதற்கான அற்புதமான வழியாக பரிணமித்திருப்பினும், அவையே தகவல், கருத்து திரிபுகளின் கருவிகளாகவும் இருக்கின்றன.

“ஏஐ தொழில்நுட்பத்தை பரிசோதிக்க ஆரம்பித்தாலும் கூட, DW ஊடக நிறுனத்தின் உத்தியில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். செயற்கை நுண்ணறிவு துணை புரியலாம். ஆனால், என்றும் அவை பத்திரிகையாளர்களின் செய்தியளிக்கும் ஆற்றலுக்கு மாற்றாக வரமுடியாது என நம்புகிறோம். சர்வதேச ஊடக நிறுவனங்களுக்கு இருக்கும் அரசியல், தொழில்நுட்பம் மற்றும் சமூக சவால்களுக்கு ஈடுகொடுக்க ஊடக அறத்தின் வழி நின்று செய்திகளை சேர்க்க நினைக்கும் உறுதியை தொடர வேண்டும்” என்றார் பீட்டர் லிம்போர்க்.

இந்த நிகழ்வில், DW நிறுவனத்தின் ஆசிய நிகழ்ச்சிகளின் இயக்குநர் தேபராதி குஹா, அண்ணா பல்கலைக்கழக ஊடக அறிவியல் துறைத் தலைவர் எஸ்.அருள்செல்வன், அண்ணா பல்கலைக்கழக சர்வதேச உறவுகளுக்கான மையத்தைச் சேர்ந்த முனைவர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.