EBM News Tamil
Leading News Portal in Tamil

ஏஐ தொழிநுட்பத்தில் சிறந்து விளங்க இந்தியா செய்ய வேண்டியது என்ன? – சத்யா நாதெள்ள விவரிப்பு | India should build foundational models for AI, but investment is real entry barrier: Satya Nadella


புதுடெல்லி: ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கான அடித்தள மாதிரிகளை இந்தியா உருவாக்க வேண்டும் என்று மைக்ரோசாஃப்ட் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சத்யா நாதெள்ள தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாஃப்ட் இந்தியா செயற்கை நுண்ணறிவு சுற்றுப்பயணம் எனும் தனது இந்த சுற்றுப் பயணத்தின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பேசிய சத்யா நாதெள்ள, “இந்திய மொழிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இந்தியா தனது தொழில்களை மாற்றியமைப்பதில் சிறந்த பணிகளைச் செய்ய முடியும். இந்தியாவால் முன்னிலை பணிகளைச் செய்ய முடியாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. முன்னிலை பணிகளை நீங்கள் மிகவும் தனித்துவமானதாகக் கூட வரையறுக்கலாம்.

உதாரணமாக, செயற்கை நுண்ணறிவு துறையில் இனிமேல் முன்னேறுவதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலை எட்டப்பட்டுவிட்டதாக நான் நினைக்கவில்லை. முன்னிலை என்று கருதப்படும் விஷயங்களுடன் வெளிப்படையாகக் கட்டுப்பட வேண்டாம். எனவே, இந்தியாவும் கண்டிப்பாக முன்னிலை பணிகளைச் செய்ய வேண்டும் என்று நான் கூறுவேன்” என்றார்.

இந்தியா தனது சொந்த செயற்கை நுண்ணறிவு அடித்தள மாதிரியை உருவாக்க வேண்டுமா என்ற தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் அபிஷேக் சிங்கின் கேள்விக்கு பதிலளித்த நாதெள்ள, “இந்தியாவுக்கு எப்போதுமே அதைச் செய்வதற்கான விருப்பம் உள்ளது. ஆனால், அடித்தள மாதிரிகளை உருவாக்குவதில் உண்மையான சவால் முதலீடு.

முதலீட்டுத் தடையை எதிர்கொள்வதற்கான மற்றொரு வழி, ஆராய்ச்சியின் உதவியுடன் செலவைக் குறைப்பதாகும். இதனை இந்தியா எப்போதும் செய்ய முடியும். உங்களுக்குத் தெரிந்தபடி நீங்கள் செய்யக் கூடாது என்று நான் கூறவில்லை. ஆனால், முன்னிலை வகிக்க விரும்பினால், இது ஒரு மூலதனம் மிகுந்த வணிகம் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

​​இந்தியா தற்போது OpenAI, Google போன்றவற்றால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு இன்ஜின்கள் அல்லது அடிப்படை மாதிரிகளைப் பயன்படுத்துகிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் பொருளாதார உருமாற்றத்திற்காக செயற்கை நுண்ணறிவுத் திறனைப் பயன்படுத்த இந்தியா ஏஐ, மைக்ரோசாப்ட் இணைந்து செயல்பட உள்ளன. டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனின் கீழ் உள்ள தன்னிச்சையான வணிகப் பிரிவான இந்தியா ஏஐ, நாட்டில் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) ஏற்றுக்கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த உத்திசார்ந்த கூட்டாண்மை இந்தியா ஏஐ இயக்கத்தின் முக்கிய நோக்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியா ஏஐ உடன் இணைந்து, மாணவர்கள், கல்வியாளர்கள், மென்பொருள் உருவாக்குபவர்கள், அரசு அதிகாரிகள், பெண் தொழில்முனைவோர் உட்பட 5,00,000 பேர்களுக்கு 2026ம் ஆண்டுக்குள் திறன் பயிற்சி அளிக்கும்.

இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் கிராமப்புற செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், ஹேக்கத்தான்கள், செயற்கை நுண்ணறிவு சந்தை மூலம் 1,00,000 செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்பாளர்கள், உருவாக்குபவர்களை இணைப்பதற்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தும்.

10 மாநிலங்களில் உள்ள 20 தேசிய திறன் பயிற்சி நிறுவனங்கள் / தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மையங்களில் செயற்கை நுண்ணறிவு உற்பத்தித்திறன் ஆய்வகங்களை அமைத்து, 20,000 கல்வியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும், 200 தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் 1,00,000 மாணவர்களுக்கு அடிப்படை செயற்கை நுண்ணறிவு படிப்புகளை மேம்படுத்தவும் உதவும்.