உலகம் முழுவதும் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட மெட்டா சேவைகள் முடங்கின: பயனர்கள் அவதி! | Meta Facebook, Instagram, Whatsapp down for thousands of users, Downdetector shows
சென்னை: உலகின் பல்வேறு பகுதிகளில் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட மெட்டா சேவை முடங்கியுள்ளது. இதனால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இரவு 11 மணி முதல் வாட்ஸ்-அப் செயலியின் மூலம் குறுந்தகவல்கள் எதுவும் பகிர இயலவில்லை என்று எக்ஸ் தளத்தில் உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் புகாரளித்து வந்தனர். அதன் பிறகு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களும் செயல்படவில்லை. முக்கிய தளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் முடங்கும் நேரங்களில் அது குறித்த தகவலை நிகழ்நேரத்தில் தெரிவிக்கும் டவுன் டிட்டெக்டர் தளத்தில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் தளங்கள் முடங்கியது குறித்து ஏராளமான பயனர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து #MetaDown, #WhatsappDown போன்ற ஹேஷ்டேகுகளை பயன்படுத்தி பயனர்கள் பலரும் புகார் கூறிவருகின்றனர். இதனால் சில நிமிடங்களிலேயே இந்த ஹேஷ்டேகுகள் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. இதுகுறித்து மெட்டா நிறுவனம் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. இதே போல கடந்த மார்ச் மாதம் இந்தியா உட்பட உலக அளவில் மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள சேவை முடங்கியது குறிப்பிடத்தக்கது.