ஏஐ முறையில் சூழல் மேம்பாட்டுக்கு தீர்வு சொல்லும் செயலி! | Coimbatore students won prizes in Hackathon at Harvard University
கோவை: உலகளவில் உயர்கல்வி வழங்குவதில் ஆக்ஸ்போர்டு, ஹார்வர்டு பல்கலைக்கழகங்கள் முன்னணியில் உள்ளன. உயர்கல்வி ஆராய்ச்சி படிப்புகளில் ஈடுபடுவோர் பலரும் இப்பல்கலைக்கழகங்களில் படிக்க ஆசைப்படுவது உண்டு. அந்தவகையில், உயர்கல்வியில் தனிச்சிறப்புடைய ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஹேக்கத்தான் போட்டியில் கோவை மாணவர்கள் பரிசு வென்று சாதித்துள்ளனர்.
இதுகுறித்து, மாணவர்கள் அம்ருத் சுப்ரமணியன், கோட்டாக்கி ஸ்ரீகர் வம்சி, சுக்கா நவநீத் கிருஷ்ணா மற்றும் சூர்யா சந்தோஷ் குமார் ஆகியோர் கூறிய தாவது: அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்களால் சர்வதேச அளவிலான புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஹேக்கத்தான் போட்டி கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. இதில் உலகளவில் 22 நாடுகளை சேர்ந்த 284 பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக ஸ்டான்போர்ட், எம்.ஐ.டி., டொரண்டோ பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர்.
கோவையில் உள்ள அம்ரிதா விஸ்வ வித்யாபீடத்தில் பி.டெக். மூன்றாம் ஆண்டு படித்துவரும் எங்களுக்கு இப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஸ்மார்ட் சிட்டி, நீடித்த நிலைத்தன்மை, ஹெல்த்கேர், செயற்கை நுண்ணறிவு ஆகிய 4 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது.
ஹேக்கத்தான் போட்டி நடைபெறும்போது தான் தலைப்புகளை அறிவிப்பார்கள். அந்தத் தலைப்புகளை மையமாக வைத்து பங்கேற்க வேண்டும். நாங்கள் முதல் 10 மணி நேரத்தில் 4 பிரிவுகளில் நீடித்த நிலைத்தன்மை என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்து என்ன மாதிரியான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும், எப்படி அதைச் செயல்படுத்த வேண்டும் என்பது போன்ற குழு ஆலோசனையில் ஈடுபட்டோம்.
எங்களின் வழிகாட்டி பேராசிரியர்கள் பிரேம்ராஜ், சாய் சுந்தரகிருஷ்ணா ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர். அடுத்த 20 மணி நேரத்தில் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் ‘சஸ்டெயினிஃபை’ (Sustainify) என்ற கழிவு மறுசுழற்சி மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு செயலியை உருவாக்கினோம். இந்த செயலியில் கூடுதலாக சூழல்-ஷாப்பிங் உதவியாளர் அம்சம் உள்ளது. இது கடைகளில் உள்ள தயாரிப்புகளை ஸ்கேன் செய்வது மட்டுமல்லாமல் குறைந்த கார்பன் தடம் உள்ள பொருட்களுக்கான பரிந்துரைகளை வழங்குகிறது.
நீரின்றி அமையாது உலகு என்பார்கள். அந்தவகையில், நீர் மேலாண்மை செய்ய வேண்டிய சூழலில் உள்ளோம். மக்களுக்கு பயனளிக்கும் நிலையான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதை இந்த செயலி முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
மனிதன் சராசரியாக தனது வாழ்நாளில் அதாவது 65 வயது வரை 1 மில்லியன் லிட்டர் நீரை பயன்படுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல 1 லிட்டர் முதல் பல ஆயிரம் லிட்டர் நீரை பயன்படுத்தி தான் ரூ.20-ல் குடிக்கும் குளிர்பானங்கள் தொடங்கி நாம் அணியும் சட்டை, ஜீன்ஸ் பேன்ட் வரை உற்பத்தி செய்கிறோம். இதில் ஒரு கார் தயாரிப்புக்கு அதிகமான நீரை நாம் செலவிடுகிறோம்.
இதுபோன்ற நீரை அதிகமாகப் பயன்படுத்தி தயாரிக்கும் பொருட்களை செயலி மூலம் தெரிந்து கொள்ள முடியும். அந்த பொருட்களை சூழல் மேம்பாடு கருதி மக்கள் தவிர்க்கலாம். அப்போது அந்த பொருட்களின் தயாரிப்பு குறைய வாய்ப்புள்ளது.
இதற்கு ஏற்ப கடைகளுக்கு செல்லும் ஒரு வாடிக்கையாளர் சஸ்டெயினிஃபை செயலியை பதிவிறக்கம் செய்து, தான் வாங்க நினைக்கும் ஒரு தயாரிப்பு பொருளை வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும். உடனே செயலியில் நிகழ் நேரத்தில், அந்த பொருளின் தயாரிப்பு முறை குறித்து விளக்கமான தகவல் வழங்கப்படும்.
அந்த தயாரிப்பு பொருட்கள் எவ்வளவு நீரை கொண்டு தயாரிக்கப்பட்டது என்றும், சூழல் பாதிப்பை தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களை எவ்வாறு வீட்டு உபயோகப் பொருளாக மாற்றுவது என்றும் ஆலோசனை வழங்கும். உதாரணத்திற்கு குளிர்பான பாட்டிலை குடித்துவிட்டு வீசி சூழல் மாசு ஏற்படாமல் தடுக்கும் வகையில் பேனா ஸ்டேண்ட் ஆகவோ அல்லது பறவைகளுக்கு உணவு வைக்கும் பொருளாகவோ பயன்படுத்திட ஆலோசனைகள் வழங்கும்.
மேலும் செயலி மூலம் பயனர் ஒருவர் தனது சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவக் குறிப்புகளை பதிவு செய்து வைத்தால் அவர் எந்த உணவை தவிர்ப்பது, எந்த உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது போன்ற தகவலையும் தரும். நாங்கள் உருவாக்கிய ‘சஸ்டெயினிஃபை’ செயலி ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஹேக்கத்தான் போட்டியில் ஒட்டுமொத்த ஆல் டிராக் கிராண்ட் பரிசை பெற்றது. இவ்வாறு அவர்கள் கூறினர்.