EBM News Tamil
Leading News Portal in Tamil

டிஜிட்டல் டைரி 19: ஏட்டிக்குப் போட்டியாகும் ஏ.ஐ சேவைகள் | Digital diary chapter 19 about red panda ai vs mid journey ai services


வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) பரப்பில் சாட்பாட் சேவைகள் ஒரு வகை என்றால், கலைப் படைப்புகளை உருவாக்கும் ஏ.ஐ கருவிகள் இன்னொரு வகை. முதல் வகையின்கீழ் ‘சாட்-ஜிபிடி’, ‘கிளாடு’, ‘ஜெமினி’ போன்ற ஏ.ஐ சாட்பாட்கள் நிறைந்திருக்கின்றன. இந்தச் சேவைகளின் அடிப்படை அம்சம், எழுத்து வடிவிலான உள்ளீட்டிற்கு எழுத்து வடிவில் பதில் அளிக்கும் திறன்.

இரண்டாவது வகையில், ‘ஆர்ட் ஜெனரேட்டர்’ எனக் குறிப்பிடப்படும் கலைப் படைப்புகளை உருவாக்கும் கருவிகள், எழுத்து வடிவிலான உள்ளீட்டிற்கு ஏற்ப உருவங்கள் அல்லது காட்சி வடிவிலான ஆக்கங்களை உருவாக்கித் தருகின்றன. ‘மிட்ஜர்னி’, ‘ஸ்டேபில் டிப்யூஷன்’, ‘டேல்–இ’ போன்ற சேவைகள் இதில் முன்னணியில் இருக்கின்றன.

‘கித்தார் வாசிக்கும் கரடி போன்றதொரு படத்தை உருவாக்கித் தரவும்’ என்று உள்ளீடு பதிவு செய்தால், நொடிப்பொழுதில் படத்தை உருவாக்கி வியக்க வைக்கின்றன ஏ.ஐ சேவைகள். இதைப் போல உருவங்களை உருவாக்கும் கருவியான ‘இமேஜ் ஜெனரேட்டர்’ சேவைகளில் ‘மிட்ஜர்னி’தான் முன்னோடி சேவையாகக் கருதப்படுகிறது. கலை உருவாக்கும் ஏ.ஐ கருவிகளுக்கு மனிதர்களால் முறையான பயிற்சி அளிக்கப்பட்டிருந்தாலும், கேட்ட மாத்திரத்தில் ஓவியங்களையும் படங்களையும் உருவாக்கித்தரும் இதன் ஆற்றல் தொடர்ந்து வியப்பில் ஆழ்த்துவதாகவே இருக்கின்றன.

இப்படி உருவங்களை உருவாக்கும் பல ஏ.ஐ கருவிகள் அறிமுகமாகிக் கொண்டே இருந்தாலும், அண்மையில் ‘ரெட் பாண்டா’ (Red Panda) எனும் பெயரில் புதிதாக ஒரு சேவை அறிமுகமானது. இந்தச் சேவையை உருவாக்கியது யார் என்கிற விவரம் ரகசியமாகவே இருந்த நிலையில், இதன் ஆக்கத்திறன் அதிகக் கவனத்தை ஈர்த்தது.

ஏ.ஐ சேவைகளை ஒப்பிட்டு அவற்றின் செயல்திறனுக்கு ஏற்ப பட்டியலிடும் https://artificialanalysis.ai/ இணையதளம் கலைப் படைப்புகள் உருவாக்கும் ஏ.ஐ கருவிகளில் ‘மிட்ஜர்னி’ போன்ற முன்னணி சேவைகளை பின்னுக்குத்தள்ளி ‘ரெட் பாண்டா’வை முன்னிலையில் அறிவித்தது பேசுபொருளானது. ஏ.ஐ சேவைகளை அவற்றின் வேகம், செயல்திறன், கட்டணம் ஆகிய மூன்று அம்சங்களில் ஒப்பிடப்பட்டது. இந்தச் சேவையைப் பயன்படுத்தும் பயனர்களின் மதிப்பீடு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையிலும் சிறந்த சேவைகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது.

‘ரெட் பாண்டா’ சேவை கவனத்தை ஈர்த்தாலும், அதன் பின்னணி தொடர்பான தகவல்கள் தெரியாமல் இருந்தது, பயனர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த ‘ரீ-கிராஃப்ட்’ (https://www.recraft.ai/generate/characters) எனும் ஏ.ஐ நிறுவனம், ’ரெட் பாண்டா’வை உருவாக்கியதாகத் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் புதிய ஏ.ஐ மாதிரி ‘வி3-ன்’ ரகசிய பெயர்தான் ‘ரெட் பாண்டா’ என்றும் அறிவித்துள்ளது. அன்னா வெரோனிகா என்பவர் இந்நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

ஏற்கெனவே 10.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்ட இந்தச் சேவை, வரைகலை வல்லுநர்களுக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. ‘ரீ-கிராஃப்ட்’ ஏ.ஐ சேவையை நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள், பயனுள்ளதாக அமையலாம்.