தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் அமலுக்கு வருகிறது: ரூ.13.93 கோடி நிதி ஒதுக்கி அரசு உத்தரவு | Rs.13.93 crore alloction for Tamil Nadu Artificial Intelligence Initiative
சென்னை: தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்க அறிக்கைக்கு ஒப்புதல் அளித்ததுடன், இயக்கத்தை அமல்படுத்த, ரூ.13.93 கோடி நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத்துறை இன்று வெளியிட்ட அரசாணையின் விவரம்: “தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் நிதியமைச்சர், “உலகளவில் அண்மைக் காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள புதிய தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு குறித்தும், அது தமிழ்ச்சமூகத்தின் பல்வேறு தரப்பிலும் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்தும், இந்த அரசு கவனமுடன் ஆய்வு செய்து வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்துறை, ஆராய்ச்சி மற்றும் மருத்துவத்துறைகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் வாய்ப்புகள் குறித்த ஆக்கபூர்வ வழிகாட்டுதல்களையும், இப்புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை வழிநடத்தத் தேவைப்படும் வரையறைகளை தெளிவாக வகுக்கவும், முதல்வர் தலைமையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் ஒன்று ஏற்படுத்தப்படும்.
தமிழகத்தின் தலை சிறந்த கல்வி நிறுவனங்களி்ன் பேராசிரியர்கள், மின்னணு தொழில்நுட்ப நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் துறை வல்லுநர்கள் இந்த அமைப்பில் இடம் பெற்றிருப்பர்’’ என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், மின்னாளுமை முகமை தலைமை செயல் அலுவலர் அரசுக்கு, தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்க அறிக்கையை அனுப்பியதுடன், தமிழக அரசு அந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பதுடன், ரூ.13.93 கோடியை இந்த இயக்கத்தை நடைமுறைக்கு கொண்டுவர ஒதுக்க வேண்டும் என்றும் பரி்ந்துரைத்தார்.
சிறப்பு அம்சங்கள்: இந்த இயக்கத்தை பொறுத்தவரை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் புது முயற்சிகளை ஊக்குவித்தல், ஏஐ தொழில்நுட்பத்தில் பயிற்சி, திறன் கட்டமைப்பை உருவாக்குதல், ஏஐ துறையில் பங்குதாரர்கள், கூட்டாண்மை ஆகியவற்றை உருவாக்கி சிறந்த செயல்பாடு, அறிவு மற்றும் வளங்களை பகிர்ந்து கொள்ளுதல் போன்றவை ஊக்குவிக்கப்படும். நிர்வாகத்தில் சிக்கல் நிறைந்த இடங்களில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவற்றை தீர்த்தல், திட்ட அமலாக்க முகமைகளுக்கு ஏஐ அடிப்படையிலான தீர்வுகளை வழங்குதல், ஆய்வாளர்கள் மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் தங்களது யோசனைகளை அமலாக்க தேவையான கட்டமைப்புகளை உருவாக்குதல் போன்றவை இதன் முக்கியமான நோக்கமாகும்.
அரசின் தரவு பகிர்வதற்கான சட்டங்கள், தரவு பாதுகாப்பு ஆகியவற்றில் தேவைப்படும் இடங்களில் ஏஐ தீர்வுகளை வழங்குதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாக இருப்பதாக, அரசுக்கு அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த இயக்கத்தை செயல்படுத்தும் அமைப்பாக தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயங்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்க அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளதுடன், இதற்காக ரூ.13.93 கோடி நிதியை ஒதுக்கியும் ஒப்புதல் அளித்துள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது.