சுனில் மிட்டலின் குரலை ஏஐ மூலம் குளோன் செய்த மோசடியாளர்கள்: விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல் | Scammers clone Sunil Mittal s voice with AI he urged to be vigilant
புதுடெல்லி: இந்திய தொழிலதிபர் சுனில் மிட்டலின் குரலை ஏஐ மூலம் குளோன் செய்து பெரிய தொகையை கைமாற்ற மோசடியாளர்கள் முயற்சித்துள்ளனர். இது குறித்து தனியார் ஊடக நிறுவன நிகழ்வில் அவர் பகிர்ந்து கொண்டது.
“ஏஐ போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மோசடியாளர்கள் பலன் அடைய முயற்சிக்கின்றனர். இதில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், துபாயில் உள்ள எனது அலுவலக பிரதிநிதியை மோசடியாளர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எனது குரலில் பேசி உள்ளனர்.
அதில் பெரிய தொகையை டிரான்ஸ்பர் செய்யுமாறு சொல்லியுள்ளனர். உடனடியாக மறுமுனையில் பேசுவது மோசடியாளர் என எனது பிரதிநிதி அறிந்து, விழிப்புடன் செயல்பட்டுள்ளார். பிறகு அதை நானும் கேட்டு அதிர்ந்து போனேன். அது அப்படியே நான் பேசுவது போல இருந்தது. வரும் நாட்களில் தொழில்நுட்ப வளர்ச்சியை கொண்டு டிஜிட்டல் கையெழுத்து, முகம் போன்றவற்றை பிரதி எடுக்க வாய்ப்புள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்தின் தீமையில் இருந்து சமூகத்தை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. அதே நேரத்தில் ஏஐ நுட்பத்தின் நன்மையை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த தயங்கும் நாடு பின்தங்கி விடும். புதிய தொழில்நுட்பங்கள் வரும் போது பிளஸ் மற்றும் மைனஸ் என்பது இருக்கும். ஏஐ மூலம் மனித இனம் பலன் அடையும் என நான் நம்புகிறேன். இருப்பினும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்” என சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.