EBM News Tamil
Leading News Portal in Tamil

AI அம்சங்களோடு புதிய ஐபேட் மினியை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம் | apple launches new ipad mini with ai features


சென்னை: ஏஐ அம்சங்கள் உள்ளடங்கிய ஐபேட் மினியை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம். அடுத்த வாரம் முதல் ஆப்பிள் ஸ்டோர்களில் இந்த சாதனம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நிறுவனமான ஆப்பிள், ஸ்மார்ட்போன், லேப்டாப், கணினி, ஐபேட், ஸ்மார்ட் ஸ்பீக்கர், ஹெட்செட் உள்ளிட்ட சாதனங்களை உற்பத்தி செய்து, உலக நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், தற்போது புதிய ஐபேட் மினியை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதில் ஆப்பிளின் ஏ17 புரோ சிப் இடம்பெற்றுள்ளது. இந்த சிப் ஐபோன் 15 புரோ மற்றும் புரோ மேக்ஸ் மாடல்களில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சிப் சிபியு செயல்திறனை 30 சதவீதம் மேம்படுத்துகிறது. ஆப்பிள் இண்டலிஜென்ஸ் ஏஐ மென்பொருளில் இது இயங்குகிறது. இதன் முதல் வெர்ஷன் அமெரிக்க பதிப்பில் வெளியாகும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

இமேஜ் ஜெனரேஷன் டூஸ்ல், ஜென்மோஜி மற்றும் சாட்ஜிபிடி உள்ளிட்ட அம்சங்கள் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாக கூடும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பரில் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்திருந்தது. அதன் மூலம் ஆப்பிள் நிறுவன சாதன விற்பனை அதிகரித்துள்ளதாக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் 2025-ம் ஆண்டின் முதல் பாதி வரை இது தொடரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 499 டாலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.