EBM News Tamil
Leading News Portal in Tamil

பூமிக்கு திரும்பிய ராக்கெட்டை கச்சிதமாக ‘கேட்ச்’ செய்த ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளம் – வீடியோ வைரல்! | SpaceX Catches Falling Rocket Booster On Launchpad


வாஷிங்டன்: விண்வெளி ஆய்வில் மிகப்பெரும் சாதனையாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏவிய சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் போகோ சிகாவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளத்தில் இருந்து இன்று (அக்.13) மாலை 5.54 மணியளவில் அந்நிறுவனம் தனது ஐந்தாவது ஸ்டார்ஷிப் விண்கலத்தை சோதனை முயற்சியாக ஏவியது. விண்ணில் ஏவப்பட்ட இரண்டரை நிமிடங்களில் விண்கலத்தில் இருந்த சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் திட்டமிட்டபடி அதிலிருந்து தனியாக பிரிந்தது.

ஸ்டார்ஷிப் விண்கலம் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் இந்திய பெருங்கடலில் இறங்குவதற்கான பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்த அதே வேளையில், சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட்டின் மீது உலகத்தின் ஒட்டுமொத்த பார்வையும் இருந்தது. காரணம் இதற்கு முன்பு ஏவப்பட்ட பூஸ்டர் திட்டமிட்டபடி பூமிக்கு திரும்பவில்லை. இந்த சூழலில் மிக துல்லியமான முறையில் புவியீர்ப்பு விசையை எதிர்த்து டெக்சாஸ் ஏவுதளத்துக்கு திரும்பி வந்தது 5000 மெட்ரிக் டன் எடை கொண்ட சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட். அதனை ’மெக்காஸில்லா’ எனப்படும் மிகப்பெரிய லான்ச்பேட், தனது ‘சாப்ஸ்டிக்ஸ்’ எனப்படும் பிரம்மாண்ட கைகளால் கேட்ச் செய்ததை உலகமே வியந்து பார்த்தது.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இது விண்வெளி ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று பலரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.