டிஜிட்டல் டைரி – 13: புதிதாக வந்தாச்சு ‘ஏஐ’ தேடு பொறி! | Digital diary chapter 13 about new ai powered search engine introduced recently
இணைய உலகின் மிகப்பெரிய தேடு பொறி எது என்பதற்கான பதில் எல்லோருக்கும் தெரிந்ததுதான். அது, ‘கூகுள்’. சரி, இரண்டாவது பெரிய தேடு பொறி எது எனத் தெரியுமா? இந்தக் கேள்விக்கான பதில் உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். ஏனெனில், கூகுளுக்கு அடுத்தபடியாக அதிகம் பயன்படுத்தும் தேடு பொறியாக இருப்பது ‘யூடியூப்’ என்று சொல்லப்படுகிறது.
மைக்ரோசாஃப்டின் ‘பிங்’ அல்லது தனியுரிமை காக்கும் ‘டக்டக்கோ’ போன்றவற்றைப் பின்னுக்குத்தள்ளி ‘யூடியூப்’ இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது. அதே நேரம், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில், இளம் தலைமுறையினர் கூகுளில் தேடுவதைவிட, ‘டிக்டாக்’ சேவையில் ஒரு விஷயத்தைத் தேடுவதை வழக்கமாக கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ‘ஜூமர்ஸ்’ எனச் சொல்லப்படும் புத்தாயிரமாண்டு தலைமுறைக்கு அடுத்து வரும் தலைமுறையினரும் ‘டிக்டாக்’ தளத்தைத் தேடு பொறியாகப் பயன்படுத்தி வருவதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.
அல்காரிதம் மூலம் வழிநடத்தப்படும் சேவை என விமர்சிக்கப்படும் டிக்டாக்கை தேடலுக்காகப் பயன்படுத்துவதில் உள்ள சாதக, பாதகங்கள் ஒரு பக்கம் இருக்க, தேடல் பரப்பில் இன்னொரு புதிய தேடு பொறி அறிமுகம் ஆகியிருக்கிறது. ‘கான்சென்சஸ்.ஆப்’ (https://consensus.app/) எனும் அந்தத் தேடு பொறி கூகுளுக்கு போட்டி அல்ல. இது, செயற்கை தொழில்நுட்பம் (ஏஐ) கொண்டு இயங்கும் தேடு பொறி என்றாலும், இது சாட்ஜிபிடிக்கும் போட்டி அல்ல.
சாட்ஜிபிடி போல, ஏஐ நுட்பம் சார்ந்து இயங்கினாலும், தேடல் முடிவுகளுக்கு ஆதாரமாக அறிவியல் நோக்கிலான ஆய்வுக் கட்டுரைகளை மட்டும் தரவுகளுக்காகப் பயன்படுத்துகிறது. ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் தகவல்களை அளிப்பதால், அவை சரியாகவே இருக்கும் எனச் சொல்கிறது. சாட்ஜிபிடி போலவே இதில் கேள்வி வடிவில் தேடலாம்; சாட்ஜிபிடி போலவே பதிலும் அளிக்கிறது. ஆனால், பதில்களுக்கு அடிப்படையாக விளங்கும் தரவுகளின் தொகுப்பில்தான் வேறுபாடு இருக்கிறது. கேள்விகள் எப்படிப் புரிந்து கொள்ளப்படுகின்றன, முடிவுகள் எப்படிப் பட்டியலிடப்படுகின்றன என்கிற விளக்கம் இத்தளத்தில் தரப்பட்டுள்ளது.
பொதுவான பதில்கள், பிழையான தகவல்கள் போன்றவை எல்லாம் இல்லாமல், ஆய்வு சார்ந்த சரியான தகவல்களைப் பெறலாம் என்கிறது ‘கான்சன்ஸ்’ தேடு பொறி. பல வகையில் தேடல் முடிவுகளை வடிகட்டிக்கொள்ளலாம். இலவசமாக அல்லது கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் முறைகளில் இது இயங்குகிறது. ஏஐ சேவைகள் முன்னிலை பெற்றுவரும் நிலையில், இந்த ஏஐ தேடு பொறி பற்றித் தெரிந்துகொள்வது நல்லது. வழக்கமான கூகுள் சேவைத் தவிர, ‘கூகுள் புக்ஸ்’, ‘கூகுள் ஸ்காலர்’ போன்ற பிரத்யேக சேவைகளைப் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்களுக்கு இந்தத் தேடு பொறி பயனுள்ளதாக இருக்கும்.
அதோடு, ‘ரெஃப்சீக்’ (https://www.refseek.com/) எனும் பழைய தேடு பொறியைப் பற்றியும் அறிந்துகொள்வோம். பெரும்பாலும் மாணவர்கள், ஆய்வாளர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் இந்தப் பொறி புத்தகங்கள், ஆய்வு இதழ்கள் போன்று ஆதாரப்பூர்வ தரவுகளில் தேடிப் பொருத்தமான தேடல் முடிவுகளை அளிக்க முற்படுகிறது. கூகுளைவிட மிக எளிமையான தேடல் பக்கம் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்னணி வர்த்தக இதழான ‘ஃபார்டியூன்’, தேடு பொறியைப் பற்றி வெளியிட்ட கட்டுரையை வாசிக்க, இந்த இணைப்பைப் பார்க்கவும் – https://fortune.com/2024/09/10/gen-z-google-verb-social-media-instagram-tiktok-search-enginehttps://fortune.com/2024/09/10/gen-z-google-verb-social-media-instagram-tiktok-search-engine/