EBM News Tamil
Leading News Portal in Tamil

டிஜிட்டல் டைரி – 12: மீண்டும் வருகிறதா ‘ஃபிளாப்பி பேர்டு’ விளையாட்டு? | Digital diary chapter 12 is flappy bird game returning back to the internet


இணையத்தில் கவனம் ஈர்த்த இரண்டு முக்கியச் செய்திகளைப் பார்ப்போம். ‘ஃபிளாப்பி பேர்டு’ விளையாட்டுக்கு அறிமுகம் தேவையில்லை. ஏனென்றால், பத்தாண்டுகளுக்கு முன்பு இணையத்தைக் கலக்கிய விளையாட்டு இது. அறிமுகமான சில மாதங்களில் பிரபலமாகி, இணையத்தைச் சுற்றி வந்த இந்த விளையாட்டு, திடீரென காணாமல் போனது. பின்பு இணையவாசிகள் அந்த விளையாட்டை மறந்து போனார்கள்.

‘ஃபிளாப்பி பேர்டு’ விளையாடுவது எளிதாகத் தோன்றினாலும் இதில் முன்னேறுவது சவாலான காரியம். அதோடு இந்த விளையாட்டில் வெற்றி பெறுவதை எல்லாம் நினைத்துகூடப் பார்க்க முடியாது. குழாய் தடைகளின் மீது மோதாமல் பறவையை முன்னேற வைப்பது மிகவும் கடினம். விளையாட்டை வெல்லவும் முடியாமல், அதிலிருந்து விலகவும் முடியாமல் ஏராளமானோரைப் புலம்ப வைத்து இணையத்தில் வைரலானது. பத்தாண்டுகளுக்கு முன்பு இப்படியொரு வரலாற்றைக் கொண்ட ‘ஃபிளாப்பி பேர்டு’ விளையாட்டு பயனர்களின் உளவியல் மாற்றங்களைப் பற்றியும் விவாதிக்க வைத்தது. விளையாட்டின் இயற்பியல் அம்சங்களும் பேசுபொருளாகின.

திறன்பேசி விளையாட்டுகளில் பெரும் வெற்றி பெற்ற ‘ஆங்கிரி பேர்டு’, ‘டெம்பிள் ரன்’ வரிசையில், ‘ஃபிளாப்பி பேர்டு’ விளையாட்டை வியட்நாம் நாட்டைச் சேர்ந்த டாங் குயேன் என்பவர் உருவாக்கினார். ‘ஃபிளாப்பி பேர்டு’ விளையாட்டின் புகழ் உச்சியில் இருந்த நேரம், எதிர்பாரத விதமாக விளையாட்டை முடக்கினார், டாங் குயேன். பயனர்கள் இதற்கு அடிமையாகிக் கொண்டிருப்பதை விரும்பாத அவர், இந்த முடிவை எடுத்ததாக விளக்கினார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் ‘ஃபிளாப்பி பேர்டு’ விளையாட்டின் பெயர் இணையத்தில் பிரபலமாகத் தொடங்கியுள்ளது. ‘ஃபிளாப்பி பேர்டு பவுண்டேஷன்’ எனும் அமைப்பு சார்பில், அதன் உறுப்பினர்கள் இந்த விளையாட்டை புது அம்சங்களோடு மறு உருவாக்கம் செய்து, மீண்டும் அறிமுகம் செய்ய உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஆனால், இந்தச் செய்தி ஏற்படுத்திய பரபரப்புக்கு நடுவே, இந்த மறு உருவாக்கத்துக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென டாங் குயேன் தெரிவித்துள்ளார். குயேனின் இந்த அறிவிப்பு ‘ஃபிளாப்பி பேர்டு’ விளையாட்டின் மறுஅவதாரத்தை எதிர்பார்த்திருந்த ஆர்வலர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இனி, இரண்டாவது செய்திக்கு வருவோம். முன்னணி தேடு பொறியான கூகுளில் ‘காஷ்’ (cache) எனும் வசதி இருந்ததைப் பலரும் கவனித்திருக்கலாம். ‘காஷ்’ என்பது, சேமிக்கப்பட்ட இணைய பக்கங்களின் முந்தைய வடிவம். கூகுள் தனது தேடல் பட்டியலில் சேர்ப்பதற்காக இணையத்தைப் புரட்டும்போது, அது எதிர்கொள்ளும் இணைய பக்கத்தின் அப்போதைய வடிவத்தை ஒரு நகலாகச் சேமித்து வைத்துகொள்ளும். தேவையிருப்பின், இந்தப் பழைய வடிவத்தை இணையவாசிகளும் அணுகலாம்.

இணையதளங்கள் முடங்கி போனாலும் அவற்றின் பழைய வடிவத்தை அணுகுவது போன்று பல்வேறு தேவைகளுக்காக இந்த வசதி பயன்பட்டது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு ‘காஷ்’ வசதியை விலக்குவதாகக் கூகுள் அறிவித்தது. இணைய ஆய்வாளர்கள் இதனால் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தனர்.