விளையாட்டு வீரர்கள் காயத்தை கண்டறிய ‘ஏ.ஐ.’ ஸ்கேனர் கருவி: சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு | new AI scanner to detect injury of sports person
சென்னை: விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்களை கண்டறியும் வகையில், செயற்கை நுண்ணறிவுடன் (ஏ.ஐ) கூடிய ஸ்கேனர் கருவியை சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்களை துல்லியமாக கண்டறியும் வகையில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய அல்ட்ராசவுண்ட் ஸ்கேனர் கருவியை சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது. பேராசிரியர் அருண் கே.திட்டை தலைமையிலான ஐஐடி விளையாட்டு அறிவியல், ஆய்வு சிறப்பு மைய ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர்.
எளிதில் எடுத்துச்செல்லக்கூடிய இந்த கருவி மூலம் வீரர்களின் உடலில் ஏற்பட்ட காயங்களை மட்டுமின்றி, அதன் பாதிப்பு எந்த அளவுக்கு பரவியுள்ளது, காயமடைந்த வீரரை தொடர்ந்து விளையாட அனுமதிக்கலாமா அல்லது உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அனுப்ப வேண்டுமா என்பதையும் உடனே கண்டறியலாம். முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்த ஸ்கேனர் கருவி உருவாக்கப்பட்டுள்ளதாக ஐஐடி தெரிவித்துள்ளது.