பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பதிவுகளை கொண்டு AI-க்கு பயிற்சி தரும் மெட்டா நிறுவனம்! | meta to start using facebook instagram posts to train ai
லண்டன்: பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் 18+ பயனர்கள் பகிரும் பதிவுகளைக் கொண்டு ஏஐ-க்கு பயிற்சி அளிக்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்தப் பணியை முறைப்படி பிரிட்டன் நாட்டில் தொடங்க உள்ளதாகவும் மெட்டா அறிவித்துள்ளது.
முன்னதாக, பிரிட்டனில் டிஜிட்டல் தள ஒழுங்குமுறை சார்ந்த சிக்கல் காரணமாக இந்தப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தத்தை எதிர்கொண்டு நிலையில் அதை தொடர்வதில் மெட்டா உறுதியாக இருப்பதை வெளிக்காட்டும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
18+ பயனர்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் பகிரும் போட்டோ, கேப்ஷன், கமெண்ட் போன்றவற்றை கொண்டு தங்களது ஜெனரேடிவ் ஏஐ மாடலுக்கு பயிற்சி அளிக்க உள்ளது மெட்டா. இது குறித்து அடுத்து வரும் வாரங்களில் பிரிட்டன் பயனர்களுக்கு இன்-ஆப் நோட்டிபிகேஷன் மூலம் தெரிவிக்க உள்ளது.
அதே நேரத்தில் பிரிட்டனின் தகவல் ஆணையர் அலுவலக அனுமதி தொடர்பாக கேட்கப்படும் விவரங்களை இந்நேரத்தில் மெட்டா சமர்ப்பிக்க உள்ளது. கடந்த ஜூன் மாதம் ஐரோப்பிய பிராந்தியத்தில் பயனர்களின் பதிவை கொண்டு ஏஐ மாடலுக்கு பயிற்சி அளிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் ‘மெட்டா ஏஐ’ சாட்பாட்டினை மெட்டா நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்தது. இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் அறிமுகமானது. இது வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களின் பயன்பாட்டுக்கு கிடைக்கிறது.