EBM News Tamil
Leading News Portal in Tamil

டிஜிட்டல் டைரி 7: மீட்டெடுக்கப்பட்ட முதல் தேடுபொறி ‘ஆர்ச்சி’ | Digital diary series chapter 7 about first search engine archie in history


‘ஆர்ச்சி’ (Archie) என்பது இணைய உலகின் முதல் தேடுபொறி (search engine). இணையத்தில் இருந்து மறைந்துவிட்டதாகக் கருதப்பட்ட நிலையில், ஆர்ச்சி தேடுபொறியின் சுவடுகளைத் தேடிக் கண்டெடுத்து மீட்டுருவாக்கம் செய்துள்ளனர் தொழில்நுட்ப வல்லுனர்கள்.

ஆர்ச்சியின் வரலாறு: ஆலன் எம்டேஜ் எனும் கல்லூரி மாணவரால் 1989ஆம் ஆண்டு ஆர்ச்சி தேடுபொறி உருவாக்கப்பட்டது. அப்போது கூகுள், இணையதளங்களின் பயன்பாடு இல்லை. ‘வேர்ல்டு வைடு வெப்’ என அறியப்படும் வைய விரிவு வலை 1991இல் உருவானபோதுதான், முதல் இணையதளம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு இணையதள புரட்சி உண்டானது.

அதற்கு முன்பு, இணையத்தில் எஃப்.டி.பி (FTP) வடிவிலான சர்வர்களும், தளங்களுமே இருந்தன. இந்த எஃப்.டி.பி சர்வர்கள் உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், ஆய்வகங்கள், அரசு அமைப்புகள், ராணுவ அமைப்பு முனையங்களில் அமைந்திருந்தன. இவற்றில் இருந்த தகவல்களைக் கண்டறிவது எளிதான காரியமல்ல. எஃப்.டி.பி சர்வர்களின் பெயர், கோப்புகள் ஆகியவற்றைச் சரியாக அறிந்திருந்தால் மட்டுமே தகவல்களைத் தேடி எடுப்பது சாத்தியம். இந்த சர்வர்களுக்கான கையேடுகள் இருந்தாலும் அவை தொகுக்கப்படாமல் இருந்தன. அப்போதுதான், எஃப்.டி.பி கோப்புகளில் உள்ள தகவல்களை தேடி எடுப்பதற்கான எளிய வழியாக ஆர்ச்சி தேடுபொறியை எம்டேஜ் உருவாக்கினார்.

கனடாவின் மெக்கில் பல்கலை மாணவராக அவர் இருந்தபோது, ஆர்ச்சி தேடுபொறியை உருவாக்கினார். இணையக் கோப்புகளைத் தேடுவதை எளிதாக்கிய ஆர்ச்சி வேகமாகப் பிரபலமானது. 1990களின் தொடக்கத்தில் ஆர்ச்சி அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. என்றபோதும், 1993இல் இணையத்தில் தேட ‘வெரோனிகா’, ‘வெப்கிராளர்’, ‘ஜம்ப்ஸ்டேஷன்’, ‘யாகூ’, ‘அல்டாவிஸ்டா’ உள்ளிட்ட பிரத்யேக தேடுபொறிகள் அறிமுகமானபோது, ஆர்ச்சிக்கான முக்கியத்துவம் குறைந்தது. 1996இல் ஆர்ச்சியின் கடைசி அப்டேட் வெளியாகி அதன் பின்பு புதுப்பிக்கப்படவில்லை.

மீட்டெடுக்கப்பட்ட ஆர்ச்சி: காலப்போக்கில் ஆர்ச்சியின் சுவடுகள் மறைந்தன. இணையதளங்களைச் சேமித்து வைக்கும் இணைய காப்பகமான ‘இண்ட்நெர்நெட் ஆர்க்கேவ்’ 1996ஆம் ஆண்டு முதலே செயல்படத் தொடங்கியதால் அதிலும் ஆர்ச்சியின் தொகுப்பு இல்லை. ஆர்ச்சியை உருவாக்கிய ஆலன் எம்டேஜ், அமெரிக்கப் பல்கலை ஒன்றுக்கு அளித்திருந்த ஆர்ச்சி சர்வரின் தொகுப்பும் அணுக முடியாத நிலையில் உள்ளது. இச்சூழலில்தான், ‘சீரியல் போர்ட்’ எனும் யூடியூப் அலைவரிசை ஆர்ச்சிக்கான தேடலைத் தொடங்கியது. போலந்து நாட்டின் வார்சா பல்கலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அதன் கடைசி தொகுப்பைக் கண்டறிந்தது.

இத்தொகுப்பைக் கொண்டு ஆர்ச்சி தேடுபொறியை மீட்டெடுத்து மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர். இணையத்தின் பழைய சுவடுகளைப் பாதுகாக்கும் டிஜிட்டல் அருங்காட்சியகமாக ‘சீரியல் போர்ட்’ (https://serialport.org/) விளங்குகிறது. இதனால்தான் கடின உழைப்பைத் தந்து முதல் தேடுபொறியான ஆர்ச்சியை மீட்டெடுத்துள்ளனர்.

ஆர்ச்சியை இத்தேடுபொறியில் பார்க்க: https://archie.serialport.org/