EBM News Tamil
Leading News Portal in Tamil

இலங்கையில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு கிரீன் சிக்னல்! | Green signal for Elon Musk Starlink internet service in Sri Lanka


கொழும்பு: இலங்கையில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு அனுமதி வழங்கியுள்ளது அந்த நாட்டு அரசு. இது குறித்து இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார்.

“இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவை வழங்குவதற்கான அனுமதியை ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. இது தேசத்தில் இணைய புரட்சியை ஏற்படுத்தும். இளைஞர்களுக்கு பயனுள்ள வகையில் அமையும். இதன் அதிவேக இணைய சேவை மூலம் இன்றைய டிஜிட்டல் காலத்தில் கல்வி சார்ந்த முன்னேற்றங்களை அடைவார்கள்.

ஸ்டார்லிங்க் அறிமுகம் இலங்கை மக்களுக்கு உதவும். பேரிடர் காலங்களிலும் பயன்படுத்த முடியும். தொலை தூரங்களில் இணைய தொடர்பு இல்லாமல் இருப்பவர்களும் பயனடைவார்கள்” என அதிபர் ரணில் தெரிவித்துள்ளார்.

அவரது ட்வீட்டுக்கு அந்த நாட்டின் இணையதள பயனர்கள் சிலர் பதில் பதிலளித்துள்ளனர். அதில் ஸ்டார்லிங்க் சேவையின் கட்டணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நாட்டின் பொருளாதார சூழல், மக்களின் வாழ்வாதாரம் போன்றவற்றையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஸ்டார்லிங்க்: அமெரிக்க நாட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம். இந்நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் புராஜக்ட் வழியே சுமார் 71 நாடுகளில் சாட்டிலைட் மூலம் அதிவேக இணைய சேவையை வழங்கி வருகிறது. அதற்கான அங்கீகாரத்தையும் ஸ்பேஸ்-எக்ஸ் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் இந்த சேவையை விரிவு செய்வதே அந்நிறுவனத்தின் நோக்கம். தற்போது ஸ்பேஸ்-எக்ஸின் துணை நிறுவனமாக ஸ்டார்லிங்க் இயங்கி வருகிறது.

அந்த வகையில் இதன் சேவை இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இது நடைமுறைக்கு வந்தால் டவர் (செல்போன் சிக்னல் கோபுரங்கள்) சார்ந்த நெட்வொர்க் சிக்கல்களை பயனர்கள் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.