EBM News Tamil
Leading News Portal in Tamil

Gemini AI மாடல் அறிமுகம்: ஏஐ ரேஸில் முந்தும் கூகுள்? | Gemini AI model introduced Google ahead in AI race


சான் பிரான்சிஸ்கோ: அண்மையில் கூகுள் நிறுவனம் ஜெமினி எனும் ஏஐ மாடலை அறிமுகம் செய்தது. மானிடர்களை போல சிந்தித்து செயல்படும் திறனை ஜெமினி கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் டெக் நிறுவனங்களுக்கு இடையில் நிலவும் ஏஐ ரேஸில் கூகுள் முந்துவதாக சொல்லப்படுகிறது.

கடந்த 2022-ம் ஆண்டின் இறுதியில் உலக அளவில் கவனம் பெற்றது ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி. இதன் கட்டமைப்பு பணியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நிதி உதவி அளித்ததாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன்னர் வரை ஏஐ நம்முடன் இருந்தாலும் ஜெனரேட்டிவ் ஏஐ-யான சாட்ஜிபிடி ஏற்படுத்திய தாக்கம் வேறு வகையில் இருந்தது. உரையாடல் முறையில் பயனர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் அளித்தது இந்த சாட் பாட். இதற்கு ஜிபிடி லேங்குவேஜ் மாடல் உதவுகிறது.

அதன் மூலம் தொழில்நுட்ப உலகில் சாம்ராட் ஆக இயங்கி வரும் கூகுள் நிறுவனத்துக்கு சவால் வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து LaMDA, PaLM 2 லேங்குவேஜ் மாடல்களை கூகுள் களம் இறக்கியது. இந்த சூழலில் அண்மையில் ஜெமினி ஏஐ மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது இந்த லேங்குவேஜ் மாடல்களின் வரிசையில் வெளிவந்துள்ளது.

ஜெமினி ஏஐ? மல்டிமாடல் லாரஜ் லேங்குவேஜ் மாடலை கொண்டு வடிவமைக்கப்பட்டது ஜெமினி. இதை வடிவமைத்தது கூகுள் டீப்மைண்ட் பிரிவு டெக் வல்லுநர்கள். கடந்த மே மாதம் நடைபெற்ற கூகுள் ஐ/ஓ நிகழ்வில் ஜெமினி குறித்த அறிமுகம் வாய்மொழியாக இருந்தது. தற்போது செயல் வடிவம் பெற்று உள்ளது. இது கூகுளின் பார்ட் சாட் பாட்-க்கு அதீத திறனை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு பிக்சல் 8 புரோ ஸ்மார்ட்போனில் மெசேஜிங் சர்வீஸில் ஆட்டோமெட்டிக்காக பயனர்கள் ரிப்ளை வழங்குவதற்கான அம்சத்தை வழங்கும் என கூகுள் தெரிவித்துள்ளது.

இப்போதைக்கு ஜெமினியின் நானோ மற்றும் புரோ வெர்ஷன் மட்டுமே அறிமுகமாகி உள்ளது. இதுவும் பயனர்களுக்கு பல்வேறு கட்டங்களாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெமினியின் அல்ட்ரா வெர்ஷன் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகமாகும் என தெரிகிறது. தற்போதைக்கு ஆங்கிலத்தில் மட்டுமே இது இயங்குகிறது. கூகுளின் தேடு பொறிகளிலும் (சேர்ச் என்ஜின்) ஜெமினி மாடல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது எப்போது என தெரிவிக்கப்படவில்லை.

டெக்ஸ்ட், போட்டோ மற்றும் வீடியோக்களை அடையாளம் காணும் அம்சத்தை கொண்டுள்ளது ஜெமினி. ப்ராப்ளம் சால்விங் திறனில் ஜெமினி அட்வான்ஸ்டு நிலையில் உள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. மனித வாழ்வை அறிவியல் சார்ந்த முன்னேற்றங்களுக்கு இது வழிவகுக்கும் என ஏஐ ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.