EBM News Tamil
Leading News Portal in Tamil

உலகின் அதிவேக இன்டர்நெட் சேவையை அறிமுகம் செய்துள்ளது சீனா! | China has launched world s fastest Internet


நொடிக்கு 1.2 டெராபிட் டேட்டாவை ட்ரான்ஸ்மிட் செய்யும் திறன் கொண்ட உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்பை சீனா அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய இன்டர்நெட் இணைப்பின் மூலம் 1 நொடியில் சுமார் 150 முறை ஒரு முழுநீள திரைப்படம் (சுமார் 3 மணி நேரம் ரன் டைம்) டவுன்லோட் செய்ய முடியும் என தெரிகிறது.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் உலகமே இணைய இணைப்பின் ஊடாக இயங்கி வருகிறது. இந்த இயக்கத்துக்கு இன்னும் வேகம் கூட்டும் வகையில் சீனா இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள சராசரி இணைய இணைப்பின் வேகத்தை காட்டிலும் பத்து மடங்கு அதிவேகமாக இது இயங்கும் என தெரிகிறது. நொடிக்கு 100 ஜிகாபிட் வேகத்தில் இதன் இயக்கும் இருக்குமாம்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள இதன் உள்கட்டமைப்பு வசதிகள் சுமார் 3,000 கிலோமீட்டர்களுக்கு மேல் சீனாவில் பரவி உள்ளதாக தகவல். இது பெய்ஜிங், வுஹான் மற்றும் குவாங்சோவை போன்ற மாகாணங்களை ஆப்டிகல் ஃபைபர் கேபிள் நெட்வொர்க் மூலம் இணைக்கிறது. சிங்குவா பல்கலைக்கழகம், சீனா மொபைல், ஹவாய் டெக்னாலஜிஸ் மற்றும் செர்னெட் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்கள் இணைந்து இதனை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளன. கடந்த ஜூலை மாதம் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டது.

இந்த மின்னல் வேக இணைய இணைப்பு உலக அளவில் கல்வி, மருத்துவம், ஆய்வு பணிகள் உட்பட பல்வேறு துறைகளில் புதிய டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.